“அஸ்வினும், லயனும் இந்த தலைமுறையின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள்” - ஹெராத் புகழாரம்

“அஸ்வினும், லயனும் இந்த தலைமுறையின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள்” - ஹெராத் புகழாரம்
Updated on
1 min read

சர்வதேச கிரிக்கெட்டில் அசத்தும் ஃபிங்கர் ஸ்பின்னர்களில் இந்தியாவின் அஸ்வின் மற்றும் ஆஸ்திரேலியாவின் லயன் ஆகியோர் இந்த தலைமுறையின் சிறந்த பந்து வீச்சாளர்கள் என இலங்கை அணியின் முன்னாள் வீரர் ரங்கணா ஹெராத் தெரிவித்துள்ளார்.

இடது கை சுழற்பந்து வீச்சாளரான ஹெராத், இலங்கை அணிக்காக 1999 முதல் 2018 வரை சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியவர். 46 வயதான அவர் 93 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 433 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். 2014 டி20 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற இலங்கை அணியில் அங்கம் வகித்தவர்.

இலங்கை கிரிக்கெட்டின் ஜாம்பவான்களில் ஒருவராக பார்க்கப்படுகிறார். இந்த சூழலில் தனது மனம் கவர்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் குறித்து அவர் பேசியுள்ளார். “ஃபிங்கர் ஸ்பின்னர்கள் என எடுத்துக் கொண்டால் அஸ்வினும், லயனும் இந்த தலைமுறையின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களாக இருப்பார்கள். தென் ஆப்பிரிக்காவின் கேஷவ் மகாராஜின் பந்து வீச்சும் எனக்கு பிடிக்கும். இந்தியாவின் குல்தீப் யாதவ் பந்து வீசுவதை பார்ப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். இலங்கை அணியில் பிரபாத் ஜெயசூர்யா சிறப்பாக செயல்படுகிறார். எனது பேவரைட் ஸ்பின்னர்கள் என்றால் இவர்களை சொல்லலாம்” என ஹெராத் தெரிவித்துள்ளார்.

அஸ்வின் மற்றும் லயன் என இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500+ விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். மூன்று போட்டிகளிலும் சேர்த்து 27 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர். துனித் வெல்லாலகே, ஜெஃப்ரி, ஹசரங்கா, அசலங்கா ஆகியோர் விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in