

இந்தியா ஏ அணியில் இடம்பெற்று 4 அணிகள் பங்கேற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அதிக ரன்களை எடுத்த சஞ்சு சாம்சன் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் என்று இந்தியா ஏ அணியின் ஃபீல்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் பயிற்சியாளர் அபய் ஷர்மா புகழாரம் சூட்டியுள்ளார்.
இஎஸ்பின் கிரிக் இன்போ இணையதளத்தில் அவர் இந்தியா ஏ அணி 4 அணிகள் பங்கேற்ற ஒருநாள் தொடரில் சாம்பியன் ஆனதையடுத்து அந்தத் தொடர் பற்றி கூறும்போது சஞ்சு சாம்சனைப் புகழ்ந்துள்ளார்.
"சஞ்சு சாம்சன் நிச்சயம் இந்தியாவின் எதிர்காலம் என்றே கூறலாம், பேட்ஸ்மெனாக திறமையாக ஆடுகிறார், சூழ்நிலைக்கு ஏற்ப அவர் தன்னை தகவமைத்துக் கொண்டு ஆடுவது அபாரம். ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அவரது இன்னிங்ஸ் மிகத் தரமாக இருந்தது. போட்டியைத் தோல்வியின் விளிம்பிலிருந்து வெற்றி பெறும் நிலைக்கு அருகில் கொண்டு வந்தார்” என்றார் அபய் ஷர்மா.
அந்தப் போட்டியில் 253 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்துக் களமிறங்கிய இந்தியா 84/6 என்று சரிந்தது. ஆனால் சஞ்சு சாம்சன் 98 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிச்கர்களுடன் எடுத்த 81 ரன்களால் இந்தியா வெற்றிக்கு அருகில் வந்தது. ஆனால் கடைசி பேட்ஸ்மெனாக சஞ்சு ஆட்டமிழக்க இந்தியா தோல்வி தழுவியது.
இந்தத் தொடரில் 7 இன்னிங்ஸ்களில் அவர் 244 ரன்கள் எடுத்து அதிக ரன்களை எடுத்த வீரர் ஆனார். அவர் இறங்கும் டவுனில் இது மிகப்பெரிய விஷயமே. ஏனெனில் இவர் 6ஆம் நிலையில் களமிறங்கினார்.
அவரது விக்கெட் கீப்பிங் பற்றிக் கூறிய அபய் ஷர்மா, “விக்கெட் கீப்பிங் நாளுக்கு நாள் மெருகேறி வருகிறது. லெக் திசையில் வந்த பந்தை பிடித்து அவர் செய்த ஸ்டம்பிங் அருமையானது” என்றார் அவர்.
சஞ்சு சாம்சனுக்கு நவம்பர் மாதம் வந்தால் 20 வயது.