

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மேட்ச் வின்னர்கள் நிறைய பேர் உள்ளனர் என்று அதன் பவுலிங் பயிற்சியாளர் லஷ்மிபதி பாலாஜி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட்டிலேயே மிகவும் சீரான அணி சென்னை சூப்பர் கிங்ஸ், 7 முறை இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. 2 முறை வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் சென்னையின் இத்தகைய ஆட்டத்திறமைக்குக் காரணம் என்ன? என்ற கேள்வியுடன் தி இந்து (ஆங்கிலம்) எல்.பாலாஜியை அணுகிய போது,
“அணியில் பேட்டிங், பவுலிங் இரண்டு ஆற்றல்களிலுமே மேட்ச் வின்னர்கள் உள்ளனர். தோனி, ராயுடு, ரெய்னா, பிராவோ, வாட்சன், டுபிளெசிஸ், ஹர்பஜன், இங்கிடி என்று இவர்களில் யார் வேண்டுமானாலும் மேட்ச் வின்னர்களாவார்கள்.
முன்பு ஹெய்டன், ஹஸ்ஸி, முரளிதரன் இருந்தனர், அணியின் முயற்சியுடன் தனிப்பட்ட திறமையும் பளிச்சிட்டது.
மேலும் தோனி மட்டுமல்லாது டுபிளெசிஸ், வாட்சன், பிராவோ ஆகியோரும் தங்கள் ஆலோசனைகளை வழங்குகின்றனர். இவர்களும் பொறுப்பைக் கையில் எடுத்துக் கொண்டு இளம் தலைமுறையினரை வழிநடத்துகின்றனர். பிறகு ஹஸ்ஸி இருக்கிறார் எப்பவும் தன் கிரிக்கெட் அறிவை சொல்லிக் கொடுக்கத் தயங்காதவர்.
தோனி களத்துக்கு வெளியே வீரர்களை ரிலாக்ஸாக இருக்க உதவுகிறார், களத்துக்கு உள்ளே ஆட்டத்தின் போக்கைச் சிறப்பாக கணிக்கக் கூடியவராக இருக்கிறார். தோனி ஆட்டத்தின் பினிஷிங் திறன், அவரது அமைதி ஆகியவை பற்றி நிறைய பேசியுள்ளோம். ஆனால் மனரீதியாக அவர் அமைதியடைவதுதான் எனக்கு அவரிடத்தில் பிடித்த விஷயம்.
நான் இறுதி ஓவர்களை வீசும் போது கூட தோனி எனக்கு அடிக்கடி ஆலோசனைகளை வழங்கியதில்லை. தனக்கு என்ன வேண்டும் என்பதை சூசகமாகத் தெரிவிப்பார் அவ்வளவுதான், பவுலர்கள் மீது அழுத்தம் ஏற்ற மாட்டார். களவியூகம் தனித்துவமானது, புதியன புகுத்துவது, அவர் உள்ளுணர்வு சார்ந்த கேப்டனாவார்.
தோனி தலைமையின் கீழ் சிஎஸ்கே ஒரு குடும்பம் போன்றது. அணியில் ஆடினால்தான் அதை அனுபவித்து உணர முடியும். ஒத்திசைவு உள்ளது, வீரர்களை நிர்வாகம் ஆதரிக்கிறது, அதனால் மகிழ்ச்சியுடன் ஆட முடிகிறது, அனைவரையும் சமபாவனையுடன் தான் தோனி நடத்துவார், அவர்கள் தங்களை சுதந்திரமாக வெளிப்படுத்த வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
சிஎஸ்கே அணியின் பலம் என்னவெனில் கடைசி பந்து வரை தோல்வியை ஏற்க மாட்டாத குணம். சாத்தியமற்ற சூழ்நிலையிலிருந்து வெல்வது, 2 ஆண்டுகள் ஐபிஎல் கிரிக்கெட்டில் இல்லை, ஆனால் இப்போது மீண்டும் வந்த விதம் எப்படி என்று நீங்களே பார்க்கிறீர்களே” என்றார் பாலாஜி.