கார் விபத்தில் உயிர்தப்பினார் சுனில் கவாஸ்கர்

கார் விபத்தில் உயிர்தப்பினார் சுனில் கவாஸ்கர்
Updated on
1 min read

மான்செஸ்டர் டெஸ்ட் போட்டி முடிந்த அன்று அங்கிருந்து லண்டன் நோக்கி கவாஸ்கர் சென்ற கார் விபத்துக்குள்ளானது. ஆனால் சரியான நேரத்தில் விழிப்புடன் இருந்ததால் காயமின்றி தப்பியுள்ளார்.

"கடவுள்தான் எங்களைக் காப்பற்றினார். நல்ல வேளையாக ஒருவருக்கும் காயமேற்படவில்லை, ஆனால் இந்த விபத்து பற்றி நினைத்தாலே பயங்கரமாக இருக்கிறது” என்று கவாஸ்கர் கூறியதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கவாஸ்கர் ஸ்கை ஸ்போர்ட்ஸ் வர்ணனைக் குழுவில் இருந்தார். இவருடன் மார்க் நிகலஸ் என்ற சக வர்ணனையாளரும் ஜாகுவார் காரில் மான்செஸ்டரிலிருந்து லண்டன் புறப்பட்டனர்.

பின் இருக்கையில் ஓட்டுனருக்கு நேராக மார்க் நிகலஸ் அமர, கவாஸ்கர் அவருக்கு எதிர்முனையில் அமர்ந்திருந்தார். ஓட்டுனர் சற்றே தூக்கக் கலக்கத்தில் வண்டி ஓட்டி வந்துள்ளார்.

மழை பெய்ததால் சாலை ஈரமாக வழுக்கியது, ஓட்டுனரும் சற்றே கண்ணயர்ந்த நேரத்தில் எதிரே வந்த கார் நேராக மோத வந்தது, கவாஸ்கர்தான் கூச்சல் போட்டு கண் அயர்ந்த ஓட்டுனரை விழிப்புக்குக் கொண்டு வந்தார். நேருக்கு நேர் மோதலைத் தவிர்க்க ஓட்டுனர் தாமதமாக எதிர்வினையாற்றினார்.

ஆனால் இரு கார்களும் மோதிக் கொண்டன. இதில் கவாஸ்கர் சென்ற ஜாகுவார் கார் கடும் சேதமடைந்தாலும், யாரும் காயமடையாமல் தப்பியுள்ளனர்.

பிறகு கவாஸ்கரும், மார்க் நிகலஸும் கிழக்கு மிட்லேண்ட் பார்க் நிலையத்திலிருந்து லண்டனுக்கு ரயிலில் சென்றனர்.

ஓட்டுனர் கவனக்குறைவாக ஓட்டும்போதெல்லாம் கவாஸ்கர் அவரை எச்சரித்து வந்துள்ளார். மார்க் நிகலஸ் கண் அயர, கவாஸ்கர் செய்தித்தாள் ஒன்றை வாசித்துக் கொண்டு வந்துள்ளார். இதனால் சரியான நேரத்தில் எச்சரிக்கை செய்தார் அவர்.

என்று இங்கிலாந்து செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in