Published : 20 May 2018 09:20 PM
Last Updated : 20 May 2018 09:20 PM

மும்பையின் ‘ப்ளே ஆஃப்’ கனவைத் தகர்த்தது டெல்லி; திருப்புமுனை லாமிச்சானே: கிங்ஸ் லெவன் தகுதிபெறுமா?

 டெல்லி பேரோஷா கோட்லா மைதானத்தில் இன்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் முக்கியத்துவம் வாய்ந்த 55-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து ப்ளே ஆஃப் கனவைத் தகர்த்தது டெல்லி டேர்வெலிஸ்ஸ்.

டெல்லி அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் நேபாள வீரர் லாமிச்சானே, அமித் மிஸ்ரா ஆகியோரின் பந்துவீச்சு மும்பை அணியின் ப்ளே ஆஃப் கனவைக் கலைத்தது.

ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறாவிட்டாலும் கடைசி வரை தனது முழு பலத்தையும், திறமையையும் வெளிப்படுத்தி விளையாட டெல்லி வீரர்கள் தயங்கவில்லை. அதற்காக அவர்களைப் பாராட்டலாம்.

கடந்த போட்டியில் வலிமை மிகுந்த சிஎஸ்கே அணியையும், நடப்பு சாம்பியன் மும்பை அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் போட்டியிலும் அடுத்தடுத்து வீழ்த்தி டெல்லி அதிர்ச்சி அளித்துள்ளது.

இந்த ஐபிஎல் தொடர் முழுவதும் லெக் ஸ்பின்னர்களான ராஷித்கான், மார்கண்டே, கோபால், மிஸ்ரா ஆகியோர் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் நேபாள லெக் ஸ்பின்னர் லாமிச்சானேவுக்கு கடைசி இரு போட்டிகளில் மட்டுமே டெல்லி அணி வாய்ப்பு கொடுத்தது வேதனைக்குரியதாகும். அவரின் முழுத்திறமையை பயன்படுத்திக்கொள்ள டெல்லி அணி இந்தத்  தொடரில் தவறிவிட்டது.

கம்பீர் தலைமையில் தொடக்கத்தில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெல்லி அணி, ஸ்ரேயாஸ் அய்யர் கரங்களுக்கு கேப்டன்ஷிப் மாறியதும் புத்துணர்ச்சியுடனும், உற்சாகத்துடனும் விளையாடி, பல வெற்றிகளைப் பெற்று வலிமையாக வெளியேறி இருக்கிறது. ஆட்ட நாயகன் விருது அமித் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்டது.

நடப்பு சாம்பியன் மும்பை அணி என பெரும் எதிர்பார்ப்புகளுடனும், ஸ்பான்சர்களுடன் களமிறங்கி கடைசியில் ப்ளே ஆஃப் சுற்றுக்குகூட தகுதி பெறாமல் புஸ்ஸாகிப் போனது.

மும்பையை ப்ளே ஆஃப் சுற்றுக்கு கொண்டுவர பல அணிகள் போராடியது(உஷ், கண்டுக்காதீங்க) ஆனால் அதைக் கூட ரோகித் சர்மா கேப்டன்ஷிப் பயன்படுத்தத் தெரியவில்லை. ரோகித் சர்மா தகுதியற்ற கேப்டனாகிவிட்டார்.

கேப்டன் ரோகித் சர்மாவின் மோசமான பேட்டிங் ஃபார்ம் தென் ஆப்பிரிக்கத் தொடரில் இருந்து தொடர்ந்து வருகிறது. ஐபிஎல் தொடரிலாவது மீண்டும் பேட்டிங் ஃபார்முக்கு திரும்புவார் என்ற எதிர்பார்ப்பு பொய்த்தது. பேட்டிங்கும் சரியில்லை, கேப்டன்ஷிப்பும் சரியில்லை.

இன்றைய போட்டியில் மும்பை அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்தது எனத் தெரிந்திருந்தும், ரோகித் சர்மா, இஷான் கிஷான், பொலார்ட், சூர்யகுமார் யாதவ், குர்னல் பாண்டயா ஆகியோரின் பொறுப்பில்லாத பேட்டிங்கை என்ன சொல்வது?.

74 ரன்களில் இருந்து 78 ரன்களைச் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகள், 121 ரன்னில் இருந்து 122 ரன்னை அடைவதற்குள் ஒரு விக்கெட்டை என திடீர் விக்கெட் வீழ்ச்சி மும்பை அணியின் தோல்விக்கு முக்கியக் காரணமாகும்.

கடைசி நேரத்தில் கட்டிங் மட்டும் அதிரடியாக பேட்டிங் செய்யாவிட்டால், மும்பை அணியின் நிலை மிகவும் மோசமானதாகி இருக்கும்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் தகுதிபெறுமா?

புனேயில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் அணியும் விளையாடி வருகின்றன. ஏற்கெனவே ப்ளே ஆஃப் சுற்றுக்கு சிஎஸ்கே தகுதிபெற்ற நிலையில், அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் அணிக்கு முக்கியமான போட்டியாகும்.

இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணியை 53 ரன்கள் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே கிங்ஸ் லெவன் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். இல்லாவிட்டால், 14 புள்ளிகளுடன் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ப்ளே ஆப் சுற்றுக்கு செல்லும்.

முதலில் பேட் செய்த டெல்லி டேர்வில்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்தது. 175 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 19.3 ஓவர்களில் 163 ரன்களுக்கு ஆட்டமிழந்து 11 ரன்களில் தோல்வி அடைந்தது.

டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் முதலில் பேட் செய்தார். இரு அணிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தன. டெல்லி அணியில் ஆவேஷ் கானுக்கு மாற்றாக லியாம் பிளங்கெட்டும், மும்பை அணியில் மெக்லனகனுக்கு பதிலாக முஸ்தபிசுர் ரஹ்மானும் அழைக்கப்பட்டனர்.

சென்னை அணிக்கு எதிரான போட்டியின் போது இருந்த அதே ஆடுகளம் என்பதால், சேஸிங் செய்வது கடினம் என்பதை அறிந்து ஸ்ரேயாஸ் முதலில் பேட் செய்தார்.

மேக்ஸ்வெல், பிரித்வி ஷா ஆட்டத்தைத் தொடங்கினார்கள். அதிரடியாக 2 பவுண்டரிகள் அடித்த பிரித்வி ஷா 12 ரன்கள் சேர்த்த நிலையில், ரன் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து ஸ்ரேயாஸ் அய்யர் களமிறங்கினார். இந்த கூட்டணி நீண்டநேரம் நிலைக்கவில்லை. 22 ரன்கள் சேர்த்த நிலையில் பும்ரா பந்துவீச்சில் மேக்ஸ்வெல் ஆட்டமிழந்தார். 38 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி தடுமாறியது.

3-வது விக்கெட்டு வந்த ரிஷாப் பந்த், கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யருடன் இணைந்தார். இதில் ரிஷாப் பந்த் அதிரடியாக பேட் செய்ய, கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் நிதானமாக ஆடினார். மார்கண்டே வீசிய 7-வது ஓவரில் ரிஷாப் பந்த் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரி விளாசினார்.

ஸ்ரேயாஸ் அய்யர் 6 ரன்கள் சேர்த்த நிலையில், மார்கண்டே பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த விஜய் சங்கர், ரிஷாப் பந்துடன் சேர்ந்தார். இருவரும் விக்கெட் வீழ்ச்சியை தடுக்கும் வகையில் பேட் செய்தனர்.

சங்கர் வந்தவுடன் பாண்டயா ஓவரில் பவுண்டரி அடித்து ர் ரன்கணக்கை தொடங்கினார். கட்டிங் வீசிய 13-வதுஓவரில் சங்கர் ஒருசிக்ஸர் விளாசினார்.

முஸ்தபிசுர் ரஹ்மான் வீசிய 15-வது ஓவரில் சங்கர் அபாரமான சிக்ஸரும், பவுண்டரியும் அடித்தார். ரிஷாப் பந்த் 34 பந்துகளில் அரை சத்தை எட்டினார்.

ஹர்திக் வீசிய 16-வது ஓவரில் ரிஷாப் பந்த் அதிரடியாக 2 சிக்ஸர்கள் விளாசி ரன்ரேட்டை உயர்த்தினார். ஆனால், குர்னல் பாண்டயா வீசிய அடுத்த (17-வது) ஓவரில் ரிஷாப் பந்த் 44 ரன்கள் சேர்த்த நிலையில்(4 சிக்ஸர், 4 பவுண்டரி) விக்கெட்டை இழந்தார். இருவரும் 4-வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்தனர்.

அடுத்து அபிஷேக் சர்மா களமிறங்கினார். கட்டிங் வீசிய கடைசி ஓவரில் அதிரடியாக பேட் செய்த சங்கர் ஒரு சிக்ஸர்,பவுண்டரி அடித்து அசத்தினார்.

20 ஓவர்கள் முடிவில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்தது. விஜய் சங்கர் 43 ரன்களிலும், அபிஷேக் சர்மா 15 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

மும்பை அணித் தரப்பில் பும்ரா, ஹர்திக் பாண்டயா, மார்கண்டே தலா ஒருவிக்கெட்டை வீழ்த்தினார்கள்.

175 ரன்கள் சேர்த்தால் ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்யலாம் என்ற இக்கட்டான நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது.

சூரியகுமார் யாதவ், லிவிஸ் களமிறங்கினார்கள். நேபாள சுழற்பந்து வீச்சாளர் லாமிச்சானே வீசிய முதல் ஓவரின் இரு பந்துகளில் பவுண்டரியும், சிக்ஸரும் விளாசிய சூரியகுமார், 4-வது பந்தில் சங்கரிடம் கேட்ச் கொடுத்து 12 ரன்களில் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

அடுத்து இஷான் இஷான் கிஷான் களமிறங்கினார். படேல் வீசிய 4-வது ஓவரில் லீவிஸ் காட்டடி அடித்தார். 2 பவுண்டரி, ஒருசிக்ஸர் அடித்து ரன் ரேட்டை உயர்த்தினார். 2-வது பந்தில் அருமையான கேட்ச் வாய்ப்பை விஜய் சங்கர் தவறவிட்டார்.

மேக்ஸ்வெல் வீசிய 5-வது ஓவரில் 2சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடித்து லீவிஸ் மிரட்டினார். களமிறங்கியதில் இருந்தே சோர்வாகவும், விருப்பமில்லாமல் பேட் செய்த கிஷான் 5 ரன்களில் மிஸ்ரா பந்துவீச்சில் சங்கரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து பொலார்ட் களமிறங்கினார்.

பிளங்கெட் வீசிய 8-வது ஓவரில் பொலார்டுக்கு ஒரு கேட்ச்வாய்ப்பை அபிஷேக் சர்மா தவறவிட்டார். இந்த கேட்ச் பிடிப்பது கடினமானது என்ற போதிலும், சிறது நகர்ந்து வந்திருந்தால், பிடித்து இருக்கலாம். மிஸ்ரா வீசிய 9-வது ஓவரில் சிக்ஸர் அடித்த லீவிஸ் கடைசி பந்தில் ரிஷாப் பந்திடம் கேட்ச் கொடுத்து 48 ரன்களில் ஆட்டமிழந்தார்.

74 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி திணறியது. லாமிச்சானே வீசிய 10-வது திருப்புமுனையாக அமைந்தது. ஒரேஓவரில் இரு விக்கெட்டுகள் சரிந்தன. 7 ரன்கள் சேர்த்த நிலையில் பொலார்டும், குர்னல் பாண்டய 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

80 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி தோல்வியை நோக்கி சென்றது. 6-வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மாவும், ஹர்திக் பாண்டயாவும் இணைந்து நிதானமாக பேட் செய்தனர்.லாமிசானே வீசிய 12-வது ஓவரில் ஒருபவுண்டரி, சிக்ஸரும், போல்ட் வீசிய 13-வது ஓவரில் இரு பவுண்டரிகளும் அடித்து ஹர்திக் நம்பிக்கையூட்டினார்.

ஏற்கெனவே மோசமான பேட்டிங் ஃபார்மில் இருக்கும் ரோகித் சர்மா இந்த போட்டியிலாவது விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதிலும் சொதப்பினார். படேல் வீசிய 14-வது ஓவரில் 12 ரன்கள் சேர்த்த நிலையில் ரோகித் சர்மா ஆட்டமிழந்து வெளியேறினார்.

சிறப்பாக பேட் செய்துவந்த ஹர்திக் பாண்டயாவும் 27 ரன்கள் சேர்த்த நிலையில், மிஸ்ராவின் 15-வது ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால், 122 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை நோக்கி மும்பை சென்றது.

பென் கட்டிங், மார்கண்டே இணைந்தனர். கடைசி 3 ஓவர்களில் 38 ரன்கள் எடுக்கவேண்டிய கட்டாயத்தில் மும்பை அணி இருந்தது.

பிளங்கட் வீசிய 18-வது ஓவரில் கட்டிங் 2 பவுண்டரிகளையும், ஒரு சிக்ஸரும் விளாசி பரபரப்பை ஏற்படுத்தினார். 12 பந்துகளுக்கு 23 ரன்கள் என்ற பரபரப்பான நிலை ஏற்பட்டது. 19-வது ஓவரை டிரன்ட் போல்ட் கட்டுக்கோப்பாக வீசினார். சிங்கிள்களாக மட்டுமே அடிக்க முடிந்தது. 3 ரன்கள் சேர்த்திருந்த மார்க்கண்டே கடைசி பந்தில் ஸ்டெம்ப் தெறித்து போல்டாகி வெளியேறினார்.

கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவைப்பட்டது. படேல் பந்துவீசினார். முதல் பந்தை கட்டிங் சிக்ஸருக்கு பறக்கவிட்டதால், ரசிகர்களுக்கு டென்ஷன் எகிறியது. 2-வது பந்தில் ஆப்சைடில் தூக்கி அடித்தார் கட்டிங், ஆனால், அது மேக்ஸ்வெல் கைகளில் தஞ்சம் புகுந்தது. 37 ரன்கள் சேர்த்து கட்டிங் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த பும்ரா ரன் ஏதும் சேர்க்காமல் போல்டிடன் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுக்க ஐபிஎல் தொடரில் இருந்து மும்பை வெளியேற்றப்பட்டது.

19.3 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி 163 ரன்களுக்கு ஆட்டமிழந்து 11 ரன்களில் தோல்வி அடைந்து, ப்ளேஆப் சுற்றுக்கு செல்லாமல் வெளியேறியது.

டெல்லி அணித் தரப்பில் லாமிசானே, மிஸ்ரா, படேல் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x