Published : 17 May 2018 07:02 am

Updated : 17 May 2018 07:04 am

 

Published : 17 May 2018 07:02 AM
Last Updated : 17 May 2018 07:04 AM

ரசிக்க வைக்க காத்திருக்கும் ரஷ்ய உலகக் கோப்பை கால்பந்து


லகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் ஜூன் 14-ம் தேதி முதல் ஜூலை 15-ம் தேதி வரை ரஷ்யாவில் நடைபெறுகிறது. 12 ஆண்டுகளுக்கு பிறகு ஐரோப்பிய கண்டத்தில் உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது. கடைசியாக 2006-ம் ஆண்டு ஜெர்மனி நாடு உலகக் கோப்பையை சிறப்பாக நடத்தியிருந்தது. தற்போது முதன்முறையாக கிழக்கு ஐரோப்பியாவில் அமைக்கப்பட்டுள்ள மைதானங்களில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. அணிகளின் பயண நேரத்தை சமாளிக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை திருவிழாவை ரஷ்யா நடத்துவதுவே இதுவே முதன்முறை. போட்டியை நடத்தும் உரிமை பெற்ற நாடு என்பதால் ரஷ்யா நேரடியாக உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. மற்ற 31 அணிகளும் தகுதி சுற்றின் வாயிலாகவே தேர்வாகி உள்ளன. இந்த 32 அணிகளில் நடப்பு சாம்பியனான ஜெர்மனி உள்ளிட்ட 20 அணிகள் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை மற்றும் அதற்கு முந்தைய தொடர்களிலும் களமிறங்கி உள்ளன. ஐஸ்லாந்து மற்றும் பனாமா அணிகள் முதன்முறையாக விளையாட தகுதி பெற்றுள்ளன. இந்த உலகக் கோப்பை திருவிழாவில் மொத்தம் 64 ஆட்டங்கள் 11 நகரங்களில் உள்ள 12 மைதானங்களில் நடத்தப்பட உள்ளது.

இறுதிப் போட்டி ஜூலை 15-ம் தேதி மாஸ்கோவில் உள்ள லூஸ்னிக்கி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் இந்த மைதானம்தான் மிகப்பெரியது. இங்கு 81 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம். உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணியானது 2021-ம் ஆண்டு நடைபெறும் ஃபிபா கான்ஃபெடரேஷன் கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறும்.

2018-ம் ஆண்டு உலகக் கோப்பையை நடத்துவதற்கான உரிமையை வழங்குதற்கான நடைமுறைகளை ஃபிபா கடந்த 2009-ம் ஆண்டு ஜனவரியில் தொடங்கியது. இந்த திருவிழாவை நடத்துவதற்கான உரிமையை பெறுவதற்காக தொடக்கத்தில் 9 நாடுகள் போட்டியிட்டன. ஆனால் தொடக்க நிலையிலேயே மெக்சிகோ விலகிக் கொண்டது. தொடர்ந்து இந்தோனேஷியாவின் விண்ணப்பத்தை ஃபிபா நிராகரித்தது. போட்டியை நடத்துவதற்காக அந்த நாட்டு அரசின் ஆதரவு கடிதம் இல்லாததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

உரிமம் வழங்குவற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் ஐரோப்பிய கால்பந்து சங்க கூட்டமைப்புகளை சேராத ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளும் பின்வாங்கின. இதனால் இறுதிகட்டத்தில் 4 நாடுகள் மட்டுமே இருந்தன. இதில் இங்கிலாந்து, ரஷ்யா ஆகிய நாடுகள் தனித்தனியாக போட்டியை நடத்த உரிமம் கோரிய நிலையில் நெதர்லாந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகள் இணைந்தும், போர்ச்சுக்கல் மற்றும் ஸ்பெயின் நாடுகள் இணைந்தும் போட்டியை நடத்த உரிமமம் கோரின. இதைத் தொடர்ந்து 2010-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி சூரிச் நகரில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் ஃபிபா செயற்குழுவைச் சேர்ந்த 22 உறுப்பினர்கள் கலந்து கொண்டு வாக்களித்தனர்.

முதல் சுற்றில் 9 வாக்குகளும், 2-வது சுற்றில் 13 வாக்குகளும் பெற்ற ரஷ்யா போட்டியை நடத்தும் உரிமை பெற்றது. போர்ச்சுக்கல் -ஸ்பெயின் அணிகளும் இரு சுற்றிலும் தலா 7 வாக்குகளும், பெல்ஜியம் - நெதர்லாந்து நாடுகள் முதல் சுற்றில் 4 வாக்குகளும், 2-வது சுற்றில் 2 வாக்குகளும் பெற்றன. இங்கிலாந்து முதல் சுற்றில் 2 வாக்கு பெற்ற நிலையில் அடுத்த சுற்றில் ஒரு வாக்கு கூட பெறவில்லை.

உலகக் கோப்பை நடத்தும் உரிமையை ரஷ்யா பெற்றதிலும் சர்ச்சை இல்லாமல் இல்லை. அந்த நாட்டுக்கு ஆதரவாக ஒட்டளிக்க செயற்குழுவில் உள்ள ஃபிபா உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக இங்கிலாந்து பகிரங்கமாக குற்றம் சாட்டியது. ரஷ்யாவுக்கு போட்டியை நடத்தும் உரிமையை வழங்குவது என்று ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டிருந்ததாகவும் புகார் கூறியது. ஆனால் இவை அனைத்துக்கும் எந்வித ஆதாரமும் இல்லை என பின்னர் ஃபிபா அறிவித்தது.

உலகக் கோப்பை தொடரின் ஆட்டங்கள் மாஸ்கோ லூஸ்னிக்கி, ஸ்பார்டக், செயின்ட் பீட்டர்ஸ்பர்க், சோச்சி பிஷ்ட் ஒலிம்பிக் மைதானம், சமரா கோஸ்மோஸ், ரோஸ்டவ், நிஷ்னி நோவ்கோரோட், சரன்ஸ்க், யெகாடெரின்பர்க், கலினின்கிராட், வோல்கோகிராட், கசான் ஆகிய 12 மைதானங்களில் நடைபெறுகிறது. இதில் லூஸ்னிக்கி, யெகாடெரின்பர்க், சோச்சி பிஷ்ட் ஒலிம்பிக் மைதானம் ஆகிய மைதானங்கள் புனரமைக்கப்பட்டவையாகும். மற்ற 9 மைதானங்களும் புதிதாக கட்டப்பட்டுள்ளன. மைதான செலவுக்காக மட்டும் சுமார் ரூ.80 ஆயிரம் கோடியை ரஷ்யா செலவழித்துள்ளது.

64 ஆட்டங்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் முதல் ஆட்டத்தில் ஜூன் 14-ம் தேதி போட்டியை நடத்தும் ரஷ்யா, சவுதி அரேபியாவுடன் மோதுகிறது. இந்தத் தொடரின் மொத்த பரிசுத்தொகை சுமார் ரூ.2,700 கோடி ஆகும். இது கடந்த ஆண்டைவிட 12 சதவீதம் அதிகம். இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி ரூ.257 கோடியை தட்டிச் செல்லும்.

முதன்முறையாக

உலகக் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக இம்முறைதான் ஃபிபாவில் உறுப்பினர்களாக உள்ள 209 நாடுகளும் தகுதி சுற்றில் பங்கேற்றன. ஆனால ஜிம்பாப்வே, இந்தோனேஷியா ஆகிய நாடுகள் தங்களது முதல் ஆட்டத்துக்கு முன்னதாக தகுதியிழப்பு செய்யப்பட்டது. அதேவேளையில் கிப்ரால்டர், கொசோவா அணிகள் ஃபிபா கூட்டமைப்பில் 2016-ம் ஆண்டு மே 13-ம் தேதிதான் இணைந்தன. அந்த நேரத்தில் தகுதி சுற்று ஆட்டங்களுக்கான அட்டவணை ஏற்கெனவே வெளியாகியிருந்தது. அனால் ஐரோப்பிய கண்டங்களுக்கு இடையிலான தகுதி சுற்றில் இவர்கள் விளையாட அனுமதிக்கப்பட்டனர்.

சிறிய நாடுகள்

இந்த உலகக் கோப்பையில் பங்கேற்கும் சிறிய நாடுகளான ஐஸ்லாந்து மற்றும் பனாமா ஆகியவை உலகத்தின் பார்வையை தங்களது மீது குவியச் செய்துள்ளது. ஐஸ்லாந்து நாட்டின் மக்கள் தொகை 3,50,710 தான். அதேவேளையில் பனாமா நாட்டின் மக்கள் தொகை 40,98,135.

28 வருடங்களுக்கு பிறகு

எகிப்து அணி 28 வருடங்களுக்கு பிறகு இம்முறைதான் உலகக் கோப்பையில் விளையாட தகுதி பெற்றுள்ளது. அந்த அணி கடைசியாக 1990-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் விளையாடியிருந்தது. இதேபோல் மொராக்கோ அணி 1998-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது களமிறங்குகிறது. பெரு அணி 36 வருட இடைவெளிக்கு களத்தில் கால்பதிக்கிறது. அந்த அணி கடைசியாக 1982-ம் ஆண்டு உலகக் கோப்பையில் பங்கேற்றிருந்தது.

2002-ம் ஆண்டு கால் இறுதி வரை முன்னேற்றம் கண்டிருந்த செனகல் அணி 2-வது முறையாக தற்போதுதான் தகுதி பெற்றுள்ளது. நார்டிக் நாடுகளை சேர்ந்த டென்மார்க், ஐஸ்லாந்து, சுவீடன் ஆகியவையும், அரபு நாடுகளான எகிப்து, சவுதி அரேபியா, துனிசியா, மொராக்கோ ஆகியவை கூட்டாக தகுதி பெற்றுள்ளது இதுவே முதன்முறை.

இத்தாலி இல்லை

4 முறை சாம்பியனான இத்தாலி இந்தத் தொடருக்கு தகுதி பெறாததே ஒருவகையில் ஏமாற்றமே. அந்த அணி பங்கேற்ற 1958-ம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக உலகக் கோப்பையில் விளையாடி வந்த நிலையில் முதன்முறையாக தற்போதுதான் வெளியே இருந்து போட்டியை பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதேபோல் 3 முறை 2-வது இடம் பிடித்த நெதர்லாந்து அணியும் தகுதி பெறவில்லை. இந்த பட்டியலில் 2017-ம் ஆண்டு ஆப்பிரிக்க கோப்பை சாம்பியனான கேமரூன், இருமுறை கோபா அமெரிக்கா சாம்பியன் மற்றும் 2017-ம் ஆண்டு கான்ஃபெடரேஷன் கோப்பையில் இறுதி போட்டி வரை கால்பதித்த சிலி, 2016-ம் ஆண்டு ஓசியானா கோப்பை சாம்பியனானா நியூஸிலாந்து, 2017-ம் ஆண்டு கான்கேப் கோல்டு கோப்பையை வென்ற அமெரிக்கா நாடுகளும் தகுதி பெறத் தவறின. மேலும் கடந்த 3 தொடர்களிலும் விளையாடிய கானா, ஐவரி கோஸ்ட் ஆகிய அணிகளும் இம்முறை தகுதி பெறாமல் போனது.

32 நாடுகள்

வழக்கம் போல் இம்முறையில் ஐரோப்பிய கண்டங்களை சேர்ந்த நாடுகளே அதிகளவில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளன. போட்டியை நடத்தும் ரஷ்யா, நடப்பு சாம்பியனான ஜெர்மனி, பெல்ஜியம், குரோஷியா, டென்மார்க், இங்கிலாந்து, பிரான்ஸ், ஐஸ்லாந்து, போலந்து, போர்ச்சுக்கல், செர்பியா, ஸ்பெயின், சுவீடன், சுவிட்சர்லாந்து ஆகிய 14 நாடுகள் களமிறங்குகின்றன.

தென் அமெரிக்க கண்டங்களில் இருந்து அர்ஜென்டினா, பிரேசில், கொலம்பியா, பெரு, உருகுவே ஆகிய 5 அணிகளும், ஆப்பிரிக்க கண்டங்களில் இருந்து எகிப்து, மொராக்கோ, நைஜீரியா, செனகல், துனிசியா ஆகிய நாடுகளும், ஆசிய கண்டத்தில் இருந்து ஆஸ்திரேலியா, ஈரான், ஜப்பான், சவுதி அரேபியா, தென் கொரியா ஆகிய நாடுகளும் வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கூட்டமைப்புகளை சேர்ந்த கோஸ்டா ரிகா, மெக்சிகோ, பனாமா ஆகிய நாடுகளும் என மொத்தம் 32 அணிகள் கால்பந்து யுத்தத்தில் களமிறங்குகின்றன. இதில் போட்டியை நடத்தும் ரஷ்யா மட்டுமே ஃபிபா தரவரிசை பட்டியலில் பின்தங்கிய (65-வது) இடத்தில் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x