

காமன்வெல்த் மகளிர் வட்டு எறிதலில் இந்தியாவின் சீமா அந்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார். அதேநேரத்தில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான கிருஷ்ணா பூனியா 5-வது இடத்தைப் பிடித்து ஏமாற்றம் அளித்தார்.
வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற இந்தப் போட்டியில் சீமா, தனது 4-வது முயற்சியில் 61.61 மீ. தூரம் வட்டு எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். 2006 காமன்வெல்த்தில் வெள்ளி வென்ற சீமா, 2010-ல் வெண்கலப் பதக்கம் வென்ற நிலையில், இப்போது 3-வது காமன்வெல்த் பதக்கத்தை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் கிருஷ்ணா பூனியா கடுமையாகப் போராடியபோதும் அவரால் 57.84 மீ. தூரத்துக்கு மேல் வட்டு எறிய முடியவில்லை. முன்னாள் உலக சாம்பியனான டேனி சாமுவேல்ஸ் (64.88 மீ. தூரம்) தங்கப் பதக்கமும், இங்கிலாந்தின் ஜேட் லாலி (60.48 மீ. தூரம்) வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
சஹானா ஏமாற்றம்
மகளிர் உயரம் தாண்டுதலில் இந்தியாவின் சஹானா குமாரி 1.86 மீ. தூரம் தாண்டியபோதும் அவரால் 8-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. இதனால் அவர் பதக்கமின்றி வெறுங்கையோடு திரும்பினார்.