ஆலி போப் சிறுபிள்ளைத்தனமான ஆட்டக்காரர்: இயன் சாப்பல் கேலி

ஆலி போப்
ஆலி போப்
Updated on
1 min read

ஆஷஸ் தொடரை மனதில் கொண்டு இங்கிலாந்து அணி பல மாற்றங்களை அணுகுமுறையிலும், பந்து வீச்சிலும் மேற்கொண்டு வருகின்றது. என்ன மாற்றங்களாயினும் ஆஸ்திரேலிய மண்ணில் அவர்களை வீழ்த்த இங்கிலாந்திடம் வேகப்பந்து ஆயுதம் அவசியம் என்றும் பீல்டர்கள் கேட்ச்களைக் கோட்டை விட்டால் அவ்வளவுதான் என்றும் இயன் சாப்பல் கூறியுள்ளார்.

ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ தளத்தில் அவர் எழுதிய பத்தியில் கூறியிருப்பதாவது: “இங்கிலாந்து கஸ் அட்கின்ஸன் போன்ற வேகப்பந்து வீச்சாளரை அணியில் எடுத்து மார்க் உட்டிற்குக் கூடுதல் பொறுப்பை வழங்கிய வகையில் பென் ஸ்டோக்ஸ் ஒரு டைனமிக் கேப்டன் என்பதை உறுதி செய்துள்ளார். அதேபோல் ரன் கட்டுப்பாட்டையே குறிக்கோளாக கொண்ட டிஃபன்சிவ் பவுலர் ஜாக் லீச்சிற்குப் பதிலாக விக்கெட் வீழ்த்தும் ஆஃப் ஸ்பின்னர் பஷீரைக் கொண்டு வந்ததும் பாசிட்டிவ் ஆன முடிவு.

ஆஸ்திரேலியாவிலும் ஆஷஸ் தொடரிலும் சிலபல நல்ல வேகப்பந்து வீச்சுதான் இங்கிலாந்து அணிக்கு சில புகழ்பெற்ற வெற்றிகளைப் பெற்றுத்தந்துள்ளது என்பதை அவர்கள் மறந்து விடுகின்றனர். 1932-33 பாடிலைன் தொடரில் லார்வுட்டின் பந்து வீச்சாகட்டும், 1954-ல் பிராங்க் டைஃபூன் டைசனாகட்டும் 1970-71-ல் நல்ல துல்லிய வேகப்பந்து வீச்சாளரான ஜான் ஸ்னோ ஆகட்டும், 2010-11 தொடரிலாகட்டும் சிலபல வேகப்பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்துக்கு வெற்றியைச் சாதித்துள்ளனர்.

பென் ஸ்டோக்ஸ் பாசிட்டிவ் ஆன கேப்டன் என்பதால் ஆஸ்திரேலியாவுக்கு சரி சமமாக ஆடுவது மட்டும் இலக்கல்ல, ஆஸ்திரேலியாவை வீழ்த்துவதுதான் இலக்கு என்று கூறியுள்ளார்.

நல்ல உடற்தகுதியுடன் கூடிய ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் உட், அட்கின்சன் கூட்டணி இங்கிலாந்துக்கு நல்வரவாக இருக்கும். ஆக்ரோஷ டேவிட் வார்னர் இல்லாமல் ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசை பலவீனமாகக் காணப்படுகிறது. வலுவான வேகப்பந்து அணியுடன் இங்கிலாந்து அணி நல்ல பீல்டிங்கையும் வளர்த்துக் கொள்ள வேண்டும், கேட்ச்களை விடக்கூடாது.

அதே போல் பேட்டிங்கில் ஆஸ்திரேலியாவுக்கு கவலை அளிக்கக் கூடியவர்களில் ஜோ ரூட் முக்கியமானவர். ஜாக் கிராலி, ஹாரி புரூக் ஆக்ரோஷ தெரிவுகளில் உள்ளனர். நல்ல திடமான விக்கெட் கீப்பர்-பேட்டர் ஜேமி ஸ்மித் நல்ல வரவாக உள்ளார்.

பென் டக்கெட்டும் ஆலி போப்பும் ஆக்ரோஷமாக ஆடுகின்றனர். விரைவில் ரன்களைக் குவிக்கின்றனர். ஆனால் ஆஸ்திரேலிய பவுலர்கள் இவர்கள் இருவரது அலட்சியங்களினால் உந்துதல் பெறுவார்கள். குறிப்பாக ஆலி போப் ஒரு சிறுபிள்ளைத்தனமான ஆட்டக்காரர். ஆஸ்திரேலியாவில் ரன்களை குவிப்பதற்கான எந்தத் தடயத்தையும் நான் அவரிடம் இதுவரைப் பார்க்கவில்லை.

ஆஸ்திரேலியாவில் வெற்றிபெற சரியான வீரர்களை தேர்வு செய்வது கட்டாயம். இங்கிலாந்து இங்குவந்து வெற்றிபெற ஒரே வழி வேகப்பந்து வீச்சும் கேட்சிங்கும்தான்.” இவ்வாறு எழுதியுள்ளார் இயன் சாப்பல்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in