ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மனு பாகர், சரப்ஜோத் சிங்குக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மனு பாகர், சரப்ஜோத் சிங்குக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து
Updated on
1 min read

புதுடெல்லி: பாரிஸ் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி பிரிவில் இந்தியாவின் மனு பாகர் மற்றும் சரப்ஜோத் சிங் வெண்கலம் வென்றுள்ளனர். அவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர். இருவரும் எக்ஸ் தள பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் வாழ்த்து: “துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி பிரிவு போட்டியில் இந்தியாவுக்காக வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாகர் மற்றும் சரப்ஜோத் சிங் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள். ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற இந்தியாவின் முதல் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை என்ற வரலாறு படைத்துள்ளார் மனு பாகர். அவர் நம்மை மிகவும் பெருமை கொள்ளச் செய்துள்ளார். எதிர்காலத்தில் மேலும் பல விருதுகள் வெல்ல அவரையும் சரப்ஜோத் சிங்கையும் வாழ்த்துகிறேன்” என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி: “நமது துப்பாக்கிச் சுடுதல் வீரர்கள் தொடர்ந்து நம்மை பெருமை கொள்ளச் செய்துள்ளனர். ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி பிரிவில் வெண்கலம் வென்ற மனு பாகர் மற்றும் சரப்ஜோத் சிங்குக்கு எனது வாழ்த்துகள். இருவரும் தங்களது சிறந்த திறனை வெளிப்படுத்தினர். அணியாக இணைந்து அபாரமாக செயல்பட்டனர். இந்தியா மகிழ்ச்சியில் உள்ளது.

மனு பாகருக்கு இது இரண்டாவது ஒலிம்பிக் பதக்கம். நிலையான ஆட்டத்தையும், சிறந்த அர்ப்பணிப்பையும் அவர் வெளிப்படுத்தி உள்ளார்.” என பிரதமர் மோடி தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார். ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றுள்ள மனு பாகர் மற்றும் சரப்ஜோத் சிங்குக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in