ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 2-வது பதக்கம்: மனு பாகர் - சரப்ஜோத் வெண்கலம் வென்றனர்

மனு பாகர் - சரப்ஜோத் சிங் ஜோடி
மனு பாகர் - சரப்ஜோத் சிங் ஜோடி
Updated on
1 min read

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் மனு பாகர் - சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. இது பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள இரண்டாவது பதக்கம்.

முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் பிரிவில் மனு பாகர், வெண்கலம் வென்று அசத்தி இருந்தார். இந்தச் சூழலில் அடுத்த 48 மணி நேரத்துக்குள் மேலும் ஒரு பதக்கம் வென்று கொடுத்துள்ளார். இதன் மூலம் ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்கள் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை மனு படைத்துள்ளார்.

33-வது ஒலிம்பிக் போட்டி பாரிஸில் நடைபெற்று வருகிறது. இதில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் கொரியாவின் ஓ யே ஜின், லீ வோன்ஹோ ஜோடியுடன் பலப்பரீட்சை மேற்கொண்டது. இதில் 16-10 என முன்னிலை பெற்று மனு பாகர் - சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றுள்ளது. தொடக்கம் முதலே இந்தியா இதில் முன்னிலை பெற்றது குறிப்பிடத்தக்கது.

“மிகவும் சிறப்பாக உணர்கிறேன். இந்த ஆட்டம் மிகவும் கடுமையானதாக இருந்தது. ஆன போதும் இதில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி. எங்கள் மீது அழுத்தம் அதிகம் இருந்தது” என வெற்றிக்குப் பிறகு சரப்ஜோத் சிங் தெரிவித்தார்.

“நான் மிகவும் பெருமையாக உணர்கிறேன். அனைவரது அன்புக்கும், ஆசிக்கும் நன்றி. நமது கையில் இருப்பதை தான் கட்டுப்படுத்த முடியும். இங்கு வருவதற்கு முன்னர் அப்பாவுடன் பேசி இருந்தேன். இறுதி ஷாட் வரை போராடலாம் என்பது தான் திட்டம்” என மனு பாகர் தெரிவித்தார். பி.வி.சிந்துவுக்கு பிறகு ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்றுள்ள இந்திய வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதே பிரிவில் செர்பியா அணியினர் தங்கமும், துருக்கி வெள்ளியும் வென்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in