ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற மனு பாக்கருக்கு தலைவர்கள் வாழ்த்து

ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற மனு பாக்கருக்கு தலைவர்கள் வாழ்த்து
Updated on
1 min read

சென்னை: பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் 33-வது ஒலிம்பிக் போட்டியில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் மகளிர் பிரிவில், வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய வீராங்கனை மனு பாக்கருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய நாட்டுக்கான முதல் பதக்கத்தை வென்று, துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் வீராங்கனை மனு பாக்கருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா தனது பதக்க எண்ணிக்கையை பாராட்டத்தக்க வகையில் தொடங்கியுள்ளது. அதன்படி பெண்களுக்கான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவுக்கான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்ற மனு பாக்கருக்கு எனது வாழ்த்துகள்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: ஒலிம்பிக் விளையாட்டில் மகளிருக்கான சுடுதல் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை மனு பாக்கருக்கு எனது பாராட்டுகள். இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள மனு பாக்கர் அடுத்தடுத்து நடைபெறும் உலகளவிலான போட்டிகளில் பங்கேற்று மேலும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துகள்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்: பாரிஸ் ஒலிம்பிக்கில், துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய வீராங்கனை மனு பாக்கருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். மனு பாக்கரால் இந்தியா பெருமை கொள்கிறது.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர், முதல் முறையாக வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியிருப்பது பாராட்டுக்குரியது. தாய் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள அவரது வெற்றிக்கு துணை நின்ற பொற்றோரையும், பயிற்சியாளரையும் பாராட்டுகிறேன்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கத்தை வென்று சாதனை படைத்திருக்கும் இந்திய வீராங்கனை மனு பாக்கருக்கு எனது வாழ்த்துகள். அடுத்தடுத்து நடைபெறும் உலகளவிலான போட்டிகளில் வெற்றி வாகைசூடி விளையாட்டு உலகில் அவர் உச்சம் தொட பாராட்டுகிறேன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in