பாரிஸ் ஒலிம்பிக்கில் முதல் பதக்கம்: துப்பாக்கிச் சுடுதலில் மனு பாகர் வெண்கலம் வென்றார்

பாரிஸ் ஒலிம்பிக்கில் முதல் பதக்கம்: துப்பாக்கிச் சுடுதலில் மனு பாகர் வெண்கலம் வென்றார்
Updated on
1 min read

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீராங்கனை மனு பாகர் வெண்கல பதக்கம் வென்றார். இதன்மூலம் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா முதல் பதக்கம் வென்றது.

33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் ஜூலை 26ல் கோலாகலமாக தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டு திருவிழாவில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,741 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இதில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் தகுதிச் சுற்றில் இந்திய வீராங்கனைகள் ரிதம் சங்க்வான், மனு பாகர் பங்கேற்றனர். இந்த தகுதிச் சுற்றில் ரிதம் சங்க்வான் 15-வது இடத்தை பிடித்து வெளியேறினார். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்த மனு பாகர் மொத்தம் உள்ள 6 சுற்றுகளில் 600-க்கு 580 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தைப் பிடித்தார். இதன் மூலம் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற அவர், இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் வெண்கல பதக்கம் வென்று அசத்தினார்.

கொரியாவின் ஓ யே ஜின் 243.2 என்ற புள்ளிகளுடன் தங்கப் பதக்கம் வென்றார். அதே கொரியாவை சேர்ந்த மற்றொரு வீராங்கனையான கிம் யெஜி 241.3 புள்ளிகள் பெற்று வெள்ளி பதக்கததை வென்றார். மனு பாகரை பொறுத்தவரை 221.7 புள்ளிகள் பெற்று வெண்கலம் வென்றார். இதன்மூலம் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா முதல் பதக்கம் வென்றது. அதேபோல், ஏர் பிஸ்டல் பிரிவில் பதக்கம் வென்ற முதல் பெண் என்ற சாதனையையும் மனு பாகர் படைத்தார். ஏர் பிஸ்டல் பிரிவில் 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு கிடைத்துள்ள பதக்கம் இதுவாகும்.

இதற்கிடையே, துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் அர்ஜுன் பபுதா இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். நாளை மாலை 3.30 மணிக்கு இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.

பிரதமர் மோடி வாழ்த்து: "வரலாற்றுப் பதக்கம்! வெல்டன், மனு பாகர். பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கமாக வெண்கலம் வென்றதற்கு வாழ்த்துக்கள். மேலும் இந்தியாவுக்காக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளதால், இந்த வெற்றி மேலும் சிறப்பு வாய்ந்தது" என்று பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in