ஃபில் சால்ட் பரிந்துரை: லங்காஷயர் அணிக்காக விளையாடுகிறார் வெங்கடேஷ் ஐயர்!

ஃபில் சால்ட் பரிந்துரை: லங்காஷயர் அணிக்காக விளையாடுகிறார் வெங்கடேஷ் ஐயர்!
Updated on
1 min read

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர், இங்கிலாந்து கவுன்ட்டி அணியான லங்காஷயர் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஒரு நாள் கோப்பை மற்றும் கவுண்டி சாம்பியன்ஷிப்பின் இரண்டு சுற்றுகளில் விளையாட உள்ளார் வெங்கடேஷ் ஐயர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சக வீரரான இங்கிலாந்தின் ஃபில் சால்ட் இவரை ஒப்பந்தம் செய்யுமாறு லங்காஷயருக்குப் பரிந்துரை செய்துள்ளார்.

ஐபிஎல் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக இந்த சீசனில் ஃபில் சால்ட் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக குவாலிஃபையர் 1-லும் இறுதிப் போட்டியிலும் அரை சதம் கண்டவர். வெங்கடேஷ் ஐயர் 5 வாரங்கள் லங்காஷயருக்கு ஆடுகிறார். அதன் பிறகு இந்திய உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் தொடங்குவதால் இந்தியா திரும்புகிறார். குறிப்பாக துலிப் டிராபி கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர் 5-ல் தொடங்குவதால் அதற்கு இந்தியா திரும்பி விடுகிறார் அவர்.

லங்காஷயரின் இளம் அணிக்கு வெங்கடேஷ் ஐயரின் அனுபவம் உதவும் என்று லங்காஷயர் கிரிக்கெட் போர்டு இயக்குநர் கூறியுள்ளார். வெங்கடேஷ் ஐயர் மூலம் ஒரு சரவெடி பேட்டர், மிடில் ஆர்டரில் அவர்களுக்குக் கிடைத்துள்ளதோடு ஒரு பவுலராகவும் பங்களிப்பு செய்ய முடியும். சர்ரே மற்றும் ஹாம்ப்ஷயர் அணிகளுக்கு எதிரான லங்காஷயரின் கவுண்ட்டி மேட்ச்களையும் வெங்கடேஷ் ஆடுகிறார். இந்த லங்காஷயர் கிரிக்கெட் ஒப்பந்தம் தன் ஆட்டத்தை மேம்படுத்த, குறிப்பாக இங்கிலாந்து ஸ்விங்கிங் கண்டிஷனில் தன்னை மேம்படுத்திக் கொள்ள உதவும் ஒரு அரிய வாய்ப்பு இதை மகிழ்வுடன் ஏற்பதாகக் கூறியுள்ளார் வெங்கடேஷ் ஐயர்.

இடது கை வீரரான வெங்கடேஷ் ஐயர் 32 முதல் தர போட்டிகளில் 1132 ரன்களை 37.37 என்ற சராசரியில் எடுத்துள்ளார். வலது கை மீடியம் பேஸ் பவுலிங்கில் 15 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். லிஸ்ட் ஏ ஒருநாள் போட்டிகளில் 40 இன்னிங்ஸ்களில் 1458 ரன்களை 101.95 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார். 50 ஓவர் வடிவத்தில் 4 சதங்கள் 5 அரை சதங்கள் எடுத்துள்ளார். 2022-ல் இந்திய அணிக்காக 2 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் ஆடியுள்ளார். அதன் பிறகு வாய்ப்பளிக்கப்படாதது பிசிசிஐ செலக்‌ஷனின் இன்னொரு புரியாத புதிர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in