Published : 30 May 2018 07:44 AM
Last Updated : 30 May 2018 07:44 AM

இழந்த பெருமையை மீட்குமா பிரான்ஸ்?

19

98-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கோப்பையைக் கைப்பற்றியது பிரான்ஸ். ஆனால் அதன் பிறகு ஒரு கோப்பையை வெல்ல அந்த அணிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 2006-ம் ஆண்டு இறுதிச் சுற்றுக்கு முன்னேறியபோதும் இத்தாலியிடம் பரிதாபமாக தோற்று வெளியேறியது பிரான்ஸ். ஆனால் தற்போது அணியில் இடம்பிடித்துள்ள இளம் வீரர்களின் உத்வேகத்தால் கோப்பையை வென்று இழந்த பெருமையை மீட்கும் முனைப்பில் பிரான்ஸ் அணி உள்ளது.

இந்த ஆண்டு ரஷ்யாவில் உலகக் கோப்பை போட்டிகள் கோலாகலமாக நடைபெறவுள்ளன. உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்னேறியுள்ள 32 அணிகளில் பிரான்ஸ் அணி சி பிரிவில் ஆஸ்திரேலியா, டென்மார்க், பெருவுடன் இணைந்துள்ளது.

உலகக் கோப்பைத் தகுதிச் சுற்று ஆட்டங்களில் ஐரோப்பாவின் குரூப் பி பிரிவில் பிரான்ஸ் அணி முதலிடம் பிடித்தது. இந்த குரூப்பில் நெதர்லாந்து, ஸ்வீடன் ஆகிய அணிகளும் இடம்பெற்றிருந்தன. ஆனால் நெதர்லாந்தையும், ஸ்வீடனையும் விட கூடுதலாக 4 புள்ளிகளைப் பெற்ற பிரான்ஸ் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிக்கு முன்னேறியது.

பிரான்ஸ் அணியின் சொத்தாகக் கருதப்படும் வீரர்கள் பவுல் போக்பா, கைலியன் மாப்பே, அன்டோய்ன் கிரீஸ்மேன் ஆகியோர்தான். அதிரடி ஆட்டத்துக்கும், அட்டகாசமாக கோல் போடுவதற்கும் பெயர் பெற்றவர்கள் இந்த மூவர். இந்த மூவர் கூட்டணிதான் பிரான்ஸ் அணிக்கு கோப்பையைப் பெற்றுத் தரப்போகிறது என்று பிரான்ஸ் ரசிகர்கள் கருதுகின்றனர்.

நடுகள ஆட்டக்காரரான பவுல் போக்பா, பிரான்ஸ் அணிக்காகவும் மான்செஸ்ட் யுனைடெட் அணிக்காகவும் விளையாடிய அனுபவ ஆட்டக்காரர். 25 வயதாகும் போக்பா, 2011-ம் ஆண்டில் பிரான்ஸ் 16 வயதுக்குட்பட்டோர் அணிக்காகத் தேர்வானார். அதைத் தொடர்ந்து 17, 18, 19, 20 வயதுக்குட்பட்டோர் அணிகளில் ஆடினார். 2013 முதல் தேசிய அணியில் தொடர்ந்து இடம்பிடித்து வருகிறார். மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணிக்காக 4 ஆண்டு காலமாக ஆடி வருகிறார். இடையில் ஜுவன்டெஸ்ட் அணிக்காக 6 ஆண்டுகள் விளையாடினார்.

19 வயதாகும் கைலியன் மாப்பே களத்தில் இறங்கினால் புயல்தான். கோல் மழை பொழியும் வரை தனது முயற்சியைக் கைவிடமாட்டார். 2017 முதல் பிரான்ஸ் தேசிய அணியில் இடம்பிடித்து வருகிறார். முன்கள ஆட்டக்காரரான கைலியன் மாப்பே தொடக்கத்தில் ஏஎஸ் பான்டி, ஐஎன்எப் கிளையர்பான்டெய்ன், மொனாக்கோ அணிகளுக்காக ஆடியிருக்கிறார். இவரது தந்தை வில்பிரைட் கால்பந்து பயிற்சியாளர். தந்தையின் ஊக்கத்தால் கால்பந்துக்கு வந்து சர்வதேச அளவில் புகழ்பெற்றுள்ளார். இவரது அனல் பறக்கும் முன்கள ஆட்டம் பிரான்ஸ் ரசிகர்களை மட்டுமல்லாமல் உலக ரசிகர்களையும் கவர்ந்து இழுத்துள்ளது.

மூவர் அணியில் உள்ள மற்றொரு வீரரான அன்டோய்ன் கிரீஸ்மேன் அடிலெடிகோ மேட்ரிக் கிளப் அணிக்காகவும், பிரான்ஸ் தேசிய அணிக்காகவும் ஆடி வருகிறார். 27 வயதாகும் கிரீஸ்மேன் ஒரு சிறந்த முன்கள ஆட்டக்காரர். 2014-ம் ஆண்டு முதல் அட்லெடிகோ மாட்ரிட் அணிக்காக ஆடி வருகிறார். பிரான்ஸ் தேசிய அணியில் 2010-ம் ஆண்டு இடம்பிடித்துவிட்டார். 2014-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் தேசிய அணியில் இடம்பிடித்து விளையாடினார். பராகுவே அணிக்கெதிரான தனது முதல் சர்வதேச கோலடித்தார்.

போக்பா, கீரிஸ்மேன் ஆகியோர் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்களாக இருக்கிறார்கள். போக்பா, கிரீஸ்மேன், மாப்பேவுடன் களமிறங்குவது மற்ற வீரர்களுக்கு மிகப்பெரிய உத்வேகமாக இருக்கும் என்று கால்பந்து விமர்சகர்கள் கணித்துள்ளனர்.

பயிற்சியாளர் டெஸ்சாம்ப்ஸின் சீரிய மேற்பார்வையில் இவர்கள் மூன்று பேரும் பட்டை தீட்டப்பட்ட வைரமாய் பிரான்ஸ் அணிக்காக களமிறங்கவுள்ளனர். 1998 உலகக் கோப்பை, 2000-ம் ஆண்டில் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் பட்டத்தை பிரான்ஸ் அணி டெஸ்சாம்ப்ஸ் தலைமையில்தான் வென்றது. நீண்ட காலமாக பயிற்சியாளராக இருக்கும் டெஸ்சாம்ப்ஸ் தலைமையில் மீண்டும் கோப்பையை கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கையில் பிரான்ஸ் ரசிகர்கள் உள்ளனர். மூவர் அணி கூட்டணியின் மூலம் பிரான்ஸ் தனது இழந்த பெருமையை மீட்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x