Published : 26 Aug 2014 06:04 PM
Last Updated : 26 Aug 2014 06:04 PM

வாசிம் அக்ரம் எனது யார்க்கர்களை துல்லியமாக்கினார்: உமேஷ் யாதவ்

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ள இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் தனது பந்து வீச்சு செழுமை பெற வாசிம் அக்ரம் உதவியது பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

பிசிசிஐ.டிவி இணையதளத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் வாசிம் அக்ரமிடம் நிறைய கற்றுக் கொண்டேன். குறிப்பாக யார்க்கர்களை வீசும்போது பந்து லெக் திசையில் செல்கிறது.

முதலில் அவர் கூறியது என்னவெனில், ‘யார்க்கர் வீச வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் பந்தை எங்கு பிட்ச் செய்யப்போகிறோம் என்பதில் முழு கவனம் அவசியம், அது லெக் திசையில் செல்லுமா என்பதையெல்லாம் யோசிக்கக் கூடாது.

யார்க்கர்களை வீசும்போது பந்து வீசும் கை, உடலின் நிலை ஆகியவை மிக முக்கியம். அதே போல் ஃபாலோ த்ரூ என்ற பந்து வீச்சை முடிக்கும் கணம் மிக முக்கியம் என்றார். பந்துக்கு முன்னால் நம் உடல் சாயக்கூடாது, உடல் பந்துக்குப் பின்னால் இருப்பது அவசியம். ஏனெனில் பந்து வீச்சை முடிக்கும்போது உடல் நிலை, கை ஆகியவற்றின் கோணத்தில் சிறு தவறு நிகழ்ந்தால் கூட பந்து பிட்ச் ஆகும் இடம் மாறிவிடும் என்று வாசிம் அக்ரம் அறிவுரை வழங்கினார்.

நவீன வேகப்பந்து வீச்சாளர்கள் யார்க்கர்களை அதிகம் நம்புவதில்லையோ? என்ற கேள்விக்கு பதில் அளித்த உமேஷ் யாதவ், “யார்க்கர் வீசுவது ஃபேஷன் இல்லை என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் அவர்களுக்கு யார்க்கர் வீசுவதில் சிக்கல் இருக்கிறது, தன்னம்பிக்கை இல்லை என்பதாகவே நான் அதைப் பற்றிக் கருதுகிறேன்.

அனைவருக்கும் யார்க்கர் எப்படி வீசுவது என்று தெரியும், ஆனால் அனைவராலும் வீசிவிட முடியாது. உதாரணமாக உங்கள் யார்க்கரை முறியடிக்க பேட்ஸ்மென்கள் சிலர் முன்னால் ஏறிவந்து ஆடுவர். ஆனாலும் நான் வீசினால் எனது யார்க்கரை அதற்காக மாற்றமாட்டேன். நாம் வீச வேண்டிய இடத்தில் கவனம் செலுத்தினால் அவர் ஒருமுறை இறங்கி வந்தாலும் எல்லா முறையும் அப்படி வந்து எதிர்கொள்ள முடியாது. யார்க்கரை ஒழுங்காக வீசினால் அதைவிட சிறந்த ஆயுதம் எதுவும் பந்துவீச்சில் இல்லை என்றே நான் கருதுகிறேன்.

ஸ்விங் பவுலிங் பற்றியும் வாசிம் அக்ரமின் ஆலோசனைகள் மதிப்பு மிக்கது. பந்து வீசும்போது மணிக்கட்டின் நிலை, தலை எப்படியிருக்க வேண்டும் என்று நிறைய நுணுக்கங்கள் இருக்கின்றன. தலையை பந்தை ரிலீஸ் செய்யும் தருணத்தில் தாழ்த்தினால் பந்து நிச்சயம் கட்டுப்பாட்டில் இருக்காது. இது போன்ற சில விஷயங்களை நான் அவரிடமிருந்து கற்றேன்.

இவ்வாறு கூறினார் உமேஷ் யாதவ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x