Published : 28 May 2018 07:44 AM
Last Updated : 28 May 2018 07:44 AM

அர்ஜென்டினாவுக்கு கோப்பையை பெற்றுத் தந்த மரியோ கெம்பஸ்

1978-ம் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியை அர்ஜென்டினா நடத்தியது. இது 11-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியாக பிரம்மாண்டமான முறையில் நடந்தேறியது.

மேலும் 1962-ம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் தென் அமெரிக்க நாட்டில் உலகக் கோப்பை நடத்தப்பட்டது இந்தப் போட்டியின் விசேஷமாகும். அர்ஜென்டினாவில் 1976-ம் ஆண்டு ராணுவப் புரட்சி வெடித்தது. 1978-ம் ஆண்டு அர்ஜென்டினாவில் ராணுவ ஆட்சி நடைபெற்று வந்ததால் போட்டியில் பங்கேற்பதில் பல நாட்டு வீரர்கள் தயங்கினர்.

மேலும் உலகக் கோப்பை கால்பந்து ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் கொரில்லா குழுவினரால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவமானது போட்டியில் பங்கேற்கும் நாடுகளுக்கு பாதுகாப்பு குறித்த அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.

ஆனாலும் வீரர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் முழுபாதுகாப்பு அளிக்கப்படும் என்ற அர்ஜென்டினா ராணுவ அரசு உத்தரவாதம் அளித்தது. பலத்த பாதுகாப்புக்கு இடையே போட்டிகள் பெரிய அளவில் அசம்பாவிதங்கள் ஏது வும் இல்லாமல் நடைபெற்றன. எனினும் பல்வேறு காரணங்களால் பிரபல வீரர்கள் சிலர் போட்டியில் பங்கேற்க மறுத்து விட்டனர்.

இந்த உலகக் கோப்பை போட்டியில் மொத்தம் 16 அணிகள் கலந்து கொண்டன. இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. ரவுண்ட் ராபின் முறையில் ஆட்டங்கள் நடந்தேறின. வெற்றி பெற்றால் 2 புள்ளிகளும், தோல்வியடைந்தால் ஒரு புள்ளியும் வழங்கப்பட்டது.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின. இந்த அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஆட்டங்கள் நடத்தப்பட்டன. அதில் முதலிடம் பிடிக்கும் இரு அணிகளும் இறுதி ஆட்டத்தில் விளையாடும் வகையில் போட்டி அட்டவணை உருவாக்கப்பட்டிருந்தது.

இந்த உலகக் கோப்பையில்தான் பெனால்டி ஷூட் அவுட் முறையை உலக கால்பந்து சம்மேளனம் (பிபா) முதன்முறையாக அறிமுகப்படுத்தியது. நாக்அவுட் ஆட்டங்களில் போட்டி நேரம் முடிந்த பிறகு இரு அணிகளும் சமநிலையில் இருந்தால் வெற்றியாளரை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் நடைமுறை கொண்டு வரப்பட்டது.

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஆப்பிரிக்க நாடு ஒன்று முதன்முறையாக ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றது இந்த உலகக் கோப்பை போட்டியின்போதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த டூனிசியா அணி 3-1 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தியது உலக கால்பந்து ரசிகர்களை வியப்பின் உச்சிக்கே கொண்டு சென்றது.

அர்ஜென்டினா - நெதர்லாந்து அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

இதனால் இருநாட்டு ரசிகர்களும் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர். இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதன்முறையாக சாம்பியன் கோப்பையை கைப்பற்றி துள்ளிக் குதித்தது.

அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் மரியோ கெம்பல் சிறப்பாக விளையாடி 6 கோல்களைப் போட்டு அசத்தினார். அவரே தங்க கால்பந்து விருதையும் தட்டிச் சென்றார். இறுதி ஆட்டத்தில் இவர் 2 கோல்களை அடித்து அணிக்கு கோப்பையைப் பெற்றுத் தந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x