

எதிரணி வீரர்களை வசைபாடுவது என்ற அணுகுமுறையில் தனக்கு ஒருபோதும் நம்பிக்கை இருந்ததில்லை என்று முன்னாள் மேற்கிந்திய வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் ஹோல்டிங் தெரிவித்துள்ளார்.
ஜடேஜா-ஆண்டர்சன் புயல் ஒருவழியாக ஓய்ந்தாலும் ஜடேஜாவை கீழே தள்ளியதை ஒப்புக் கொண்டுள்ளார் ஜேம்ஸ் ஆண்டர்சன். இதுபற்றி விஸ்டன் இதழில் பத்தி எழுதியுள்ள மைக்கேல் ஹோல்டிங் கூறியதாவது:
"பொதுவாக ஏதாவது பேசுவது வேறு விஷயம், எதிரணி வீரர்களை இழிவு படுத்தும் விதமாகப்பேசுவதில் எனக்கு ஒருபோதும் நம்பிக்கையிருந்ததில்லை.
அதற்காக இந்தியா பதிலடி கொடுப்பதான பேச்சிலும் எனக்கு நம்பிக்கையில்லை. கிரிக்கெட் என்ன கால்பந்தாட்டமா? அதில்தான் ஒரு வீரரை எதிரணி வீரர் தள்ளி விட்டால் மீண்டும் அவரை இவர் தள்ளிவிடுவது என்பது நடக்கும். இது மேலும் மேலும் பகையை வளர்க்கவே உதவும்.
கிரிக்கெட் ஆட்டம் களத்தில் மட்டைக்கும் பந்துக்கும் நடக்கும் போராட்டமாகவே இருக்க வேண்டும்” என்றார்.
இந்திய அணியின் தோல்விக்கும் இந்த விவகாரத்திற்கும் தொடர்பிருக்கிறது என்று பொதுவாக பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருவது குறித்து கூறிய ஹோல்டிங், "தோனி சரியான அணியைத் தேர்வு செய்யவில்லை என்ற விமர்சனத்தை முழுதும் ஏற்கிறேன், ஜடேஜா நல்ல ஸ்பின்னர் இல்லை. அஸ்வினைத்தான் அணியில் தேர்வு செய்திருக்க வேண்டும்.
இதைத் தவிர இந்தியா மோசமாக விளையாடியது. கேட்ச்களைக் கோட்டைவிட்டனர். ஃபீல்டிங்கில் பந்துகளைத் தவறவிட்டனர். முன்னணி பேட்ஸ்மென்கள் மோசமான ஷாட் தேர்வில் ஆட்டமிழந்தனர். இந்தியா நல்ல கிரிக்கெட்டை விளையாடவில்லை, அதுவே தோல்விக்குக் காரணம்” என்றார்.