Published : 23 May 2018 08:26 AM
Last Updated : 23 May 2018 08:26 AM

ஐபிஎல் தொடரின் வெளியேற்றும் சுற்றில் ராஜஸ்தான் - கொல்கத்தா இன்று மோதல்

ஐபிஎல் தொடரில் வெளியேற்றும் சுற்றில் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி இந்த சீசனில் லீக் சுற்றில் இருமுறை ராஜஸ்தானை வீழ்த்தி உள்ளது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் 7 விக்கெட்கள் வித்தியாசத்திலும், ஈடன்கார்டனில் நடைபெற்ற ஆட்டத்தில் 6 விக்கெட்கள் வித்தியாசத்திலும் கொல்கத்தா அணி வெற்றியை பதிவு செய்திருந்தது. கடைசியாக பங்கேற்ற 3 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்று 6-வது முறையாக பிளே ஆஃப் சுற்றை சந்திக்கிறது அந்த அணி. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள அணிகளில் சொந்த மைதானத்தில் விளையாடும் வாய்ப்பை கொல்கத்தா மட்டுமே பெற்றுள்ளது.

இன்று நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியானது தகுதி சுற்று 2-ல் விளையாட தகுதி பெறும். வெளியேறும் சுற்றில் வெற்றி பெறும் அணியானது முதல் தகுதி சுற்று-1 ஆட்டத்தில் தோல்வியடையும் அணியுடன் பலப்பரீட்சை நடத்தி வெற்றி கண்டால் மட்டுமே இறுதி போட்டியில் கால்பதிக்க முடியும். அறிமுக தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ராஜஸ்தான் அணி, யாரும் எதிர்பாராத வகையில் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

அந்த அணியில் ஜாஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் விளையாடாதது சற்று பின்னடைவுதான். எனினும் இவர்கள் இல்லாத நிலையிலும் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றை இறுக பற்றிக் கொண்டது ராஜஸ்தான் அணி. இதன் பின்னர் மும்பை, பஞ்சாப் அணிகள் தங்களது கடைசி லீக் ஆட்டங்களில் ஏமாற்றம் அடைந்ததால் பிளே ஆஃப் சுற்றில் எந்தவித சிக்கலும் இல்லாமல் நுழைந்தது அஜிங்க்ய ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணி.

வெளியேற்றும் ஆட்டம் என்பது கால் இறுதி ஆட்டம் போன்றதே, தோல்வியடைந்தால் தொடரில் இருந்து வெளியேற வேண்டியதுதான். ராஜஸ்தான் அணிக்கு கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர்களிடம் இருந்து சவால் காத்திருக்கக்கூடும். ஏனெனில் இந்த மைதானத்தில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சுனில் நரேன், பியூஸ் சாவ்லா, குல்தீப் யாதவ் ஆகியோர் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தியிருந்தனர். இந்த மூவர் கூட்டணி அந்த ஆட்டத்தில் 7 விக்கெட்களை வேட்டையாடியிருந்தது. அதிலும் குல்தீப் யாதவ் 20 ரன்களுக்கு 4 விக்கெட்கள் கைப்பற்றியிருந்தார்.

பேட்டிங்கில் ஜாஸ் பட்லர் இல்லாத நிலையில் ராகுல் திரிபாதி கடந்த ஆட்டத்தில் பொறுப்புடன் விளையாடி 80 ரன்கள் சேர்த்தார். அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். சஞ்சு சாம்சன், ரஹானே, ஹென்ரிச் கிளாசென், கிருஷ்ணப்பா கவுதம், ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோரும் பொறுப்புடன் விளையாடும் பட்சத்தில் பேட்டிங் வலுப்பெறும்.

கொல்கத்தா அணியை பொறுத்தவரையில் தினேஷ் கார்த்திக் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைக்கும் திறனை பெற்றிருப்பது பலமாக உள்ளது. இந்த சீசனில் அவர், 6 ஆட்டங்களில் ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று வெற்றிக்கான பங்களிப்பைச் செய்துள்ளார். இந்த சீசனில் 438 ரன்கள் சேர்த்துள்ள அவர் மீண்டும் ஒரு பயனுள்ள இன்னிங்ஸை விளையாட ஆயத்தமாக உள்ளார். இதபோல் தொடக்க பேட்டிங்கில் வெளுத்து வாங்கும் சுனில் நரேனும் ராஜஸ்தான் அணிக்கு சவால் கொடுக்கக்கூடும். கிறிஸ் லின், ராபின் உத்தப்பா, நித்திஷ் ராணா, ஆந்த்ரே ரஸ்ஸல் ஆகியோரும் பேட்டிங்கில் வலு சேர்ப்பவர்களாக உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x