

வெளிநாட்டில் நடைபெறும் டெஸ்ட் தொடர்களில் பேட்ஸ்மேன்கள் தொடர்ச்சியாக ரன் குவித்தாலொழிய வெற்றி பெற முடியாது என இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “முதல் இன்னிங்ஸில் 350 ரன்களுக்கு மேல் குவித்தால் அந்தப் போட்டியில் வெற்றி பெறலாம். இல்லாதபட்சத்தில் வெற்றி பெறுவது கடினமானது என நினைக்கிறேன். கடந்த காலங்களில் வெளிநாட்டில் பெற்ற வெற்றிகளுக்கு அதிக ரன் குவித்ததே முக்கியக் காரணமாக இருந்தது. அதிக அளவில் ரன் குவித்துவிட்டால் எதிரணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்த முடியும்” என்றார்.
தனது காயம் குறித்துப் பேசிய அவர், “சீரான அளவில் குணமடைந்து வருவதாக” குறிப்பிட்டார். ஜாகீர்கான் காயத்திலிருந்து இன்னும் குணமடையாததால் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் விளையாடமாட்டார் என தெரிகிறது.