

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தேநீர் இடைவேளையின்போது இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 56 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்திருந்தது.
தனிநபராகப் போராடிய கேப்டன் தோனி, அரைசதமடித்து இந்தியாவை மிக மோசமான நிலையில் இருந்து மீட்டார்.
லண்டன் ஓவல் மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியில் இந்திய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டன. பங்கஜ் சிங், ஜடேஜா ஆகியோருக்குப் பதிலாக முறையே இஷாந்த் சர்மா, ஸ்டூவர்ட் பின்னி ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
மழை காரணமாக அரைமணி நேரம் தாமதமாக தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் குக், இந்திய அணியை பேட் செய்ய அழைத்தார். ஆண்டர்சன் வீசிய போட்டியின் முதல் ஓவரிலேயே கௌதம் கம்பீர் டக் அவுட்டாக, இந்தியாவின் சரிவு ஆரம்பமானது. பின்னர் வந்த புஜாரா 4 ரன்களில் வெளியேற, 10 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்தியா.
இதையடுத்து விஜயுடன் இணைந்தார் கோலி. வழக்கம்போல் இந்தப் போட்டியிலும் கோலி ஏமாற்றினார். அவர் 6 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரஹானே இந்தியாவை சரிவிலிருந்து மீட்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரன் கணக்கைத் தொடங்காமலேயே பெவிலியன் திரும்பினார். ஒருபுறம் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் நிதானம் காட்டிய விஜய் 64 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து வோக்ஸ் பந்தில் ஆட்டமிழக்க, 36 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்தியா. பின்னர் வந்த பின்னி 5 ரன்களில் நடையைக் கட்ட, கேப்டன் தோனியுடன் இணைந்தார் அஸ்வின். தோனி நிதானமாக ஆட, பந்துகளை வீணடிக்காமல் விளையாடிய அஸ்வின் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 24 ரன்கள் சேர்த்தது.
இதன்பிறகு வந்த புவனேஸ்வர் குமார் 5 ரன்களில் ஆட்டமிழக்க, வருண் ஆரோன் களம்புகுந்தார். அப்போது இந்தியா 8 விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்திருந்தது. 17 பந்துகளைச் சந்தித்த ஆரோன் 1 ரன்னில் வெளியேற, இஷாந்த் சர்மா களம்புகுந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆட 48-வது ஓவரில் 100 ரன்களை எட்டியது இந்தியா.
தேநீர் இடைவேளையின்போது இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 56 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்திருந்தது.
தோனி 124 பந்துகளில் 1 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 65, இஷாந்த் சர்மா 2 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் ஜோர்டான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.