படம் குருணால் பாண்டியாவின் இன்ஸ்டாகிராம் பதிவில் இருந்து.
படம் குருணால் பாண்டியாவின் இன்ஸ்டாகிராம் பதிவில் இருந்து.

“ஹர்த்திக் பாண்டியாவின் கடினமான 6 மாத காலகட்டம்...” - குருணால் பாண்டியா உருக்கம்

Published on

தனது தம்பி ஹர்திக் பாண்டியா கடந்த 6 மாதங்களாக அடைந்த துன்பம் குறித்தும் இப்போது உலகக் கோப்பை டி20-யில் மீண்டெழுந்தது பற்றியும் உருக்கமான பதிவு ஒன்றை அண்ணன் குருணால் பாண்டியா பதிவிட்டுள்ளார்.

குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து மும்பை இந்தியன்ஸுக்கு பெரிய தொகையில் மாறியதற்காக குஜராத் ரசிகர்கள் அவர் மீது காழ்ப்பைக் கொட்டினர், ரோஹித் சர்மாவின் கேப்டன்சியைப் பறித்ததால் மும்பை வான்கடேயிலும் கடும் கேலிகளுக்கும் கிண்டல்களுக்கும் மீம்களுக்குமான மெடீரியல் ஆனார் ஹர்திக் பாண்டியா, மிகுந்த மன உளைச்சலைக் கொடுத்த காலகட்டமாக இந்த 6 மாத காலம் அவருக்கு துயர் அளித்து வந்தன.

இந்நிலையில் இந்திய அணிக்காக ஹர்திக் சிறப்பாக ஆடினால் அவர் இழந்த நற்பெயரை மீட்டெடுக்கலாம் என்று கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில் 2024 டி20 உலகக்கோப்பையில் அட்டகாசமாக ஆடி, குறிப்பாக இறுதிப் போட்டியில் கிளாசனின் விக்கெட்டுடன் இறுதி ஓவரை அற்புதமாக வீசி கோப்பையை வென்றதில் முக்கியப் பங்கு வகித்து இழந்த நற்பெயரை மீட்டுள்ளார்.

இதை மையப்படுத்தி குருணால் பாண்டியா இட்ட பதிவில், “10 ஆண்டுகளுக்கு முன்பாக நானும், ஹர்திக் பாண்டியாவும் தொழில்முறை கிரிக்கெட்டை தொடங்கினோம். கடந்த சில தினங்கள் நாங்கள் கனவித்த தேவதைக் கதை போன்று அமைந்தது. நம் நாட்டின் ஒவ்வொரு பிரஜையையும் போல் இந்திய வெற்றியைக் கொண்டாடினேன். அதுவும் என் சகோதரன் ஹர்திக் வெற்றியின் மையமாக இருந்தது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணம்.

கடந்த 6 மாத காலம் ஹர்திக்கிற்கு கடினமான காலகட்டம். பாவம். அவருக்கு அப்படியோரு கஷ்டம் வந்திருக்கக் கூடாது. ஒரு சகோதரனாக அவரை நினைத்து உண்மையில் மிக மிக வருந்தினேன். அவரை கேலியும் கிண்டலும் செய்ததோடு ஹர்திக்கைப் பற்றி அவதூறுகளைப் பேசி வந்தது உண்மையில் காயப்படுத்தியது. கடைசியில் ஹர்திக் பாண்டியாவும் ஒரு மனிதர்தான் அவருக்கும் உணர்ச்சிகள் உண்டு என்பதை நாம் அனைவருமே மறந்து விட்டோம். ஆனால் புன்னகையுடன் இவற்றைக் கடந்து விட்டார் ஹர்திக்.

ஆனால் இத்தகைய கஷ்ட காலத்தில் அவரால் எப்படி புன்னகையுடன் கடக்க முடிகிறது என்பது எனக்குமே ஆச்சரியம்தான். கடைசியில் தன் முழு அர்ப்பணிப்புடன் இந்திய அணியின் ஐசிசி கோப்பைக் கனவை நிறைவேற்றியதில் முக்கியப் பங்கு வகித்துள்ளார். 6 வயது முதலே நாட்டுக்காக ஆட வேண்டும் உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே எங்கள் கனவாக இருந்தது” என்று உருக்கமாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் குருணால் பாண்டியா

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in