Published : 19 May 2018 07:37 AM
Last Updated : 19 May 2018 07:37 AM

பிளே ஆஃப் வாய்ப்பை பெறுமா கொல்கத்தா ?: ஹைதராபாத்துடன் இன்று மோதல்

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு ஹைதராபாத்தில் நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

பிளே-ஆப் சுற்றுக்கு ஹைதராபாத் அணி ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டது. அதேவேளையில் 14 புள்ளிகளுடன் உள்ள கொல்கத்தா அணிக்கு இது கடைசி லீக் ஆட்டம். அந்த அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் 16 புள்ளிகளுடன் எளிதாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துவிடும். மாறாக தோல்வியடைந்தால் 14 புள்ளிகளுடன் மற்ற ஆட்டங்களின் முடிவுக்காகக் காத்திருக்க வேண்டும்.

எனவே அந்த அணி வீரர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர். பேட்டிங்கில் தினேஷ் காரத்திக், சுனில் நரேன், ஆந்த்ரே ரஸ்ஸல், கிறிஸ் லின் சிறந்த பார்மில் உள்ளனர். பந்து வீச்சில் சிவம் மாவி. பிரசித் கிருஷ்ணா, பியூஷ் சாவ்லா, ரஸ்ஸல், சுனில் நரேன், குல்தீப் யாதவ் ஆகியோர் எதிரணிக்கு சவால் கொடுக்க காத்திருக்கின்றனர்.

கடந்த இரு ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்த ஹைதராபாத் அணி வெற்றிப் பாதைக்கு திரும்ப முயற்சிக்கக்கூடும். அந்த அணியின் வலுவான பந்து வீச்சு இரு ஆட்டங்களிலும் எதிரணியால் சிதைக்கப்பட்ட நிலையில் பேட்டிங்கில் எழுச்சி கண்டுள்ளது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் மணீஷ் பாண்டே ஆகியோரிடம் இருந்து மீண்டும் ஒரு சிறப்பான இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும்.

ராஜஸ்தான்-பெங்களூரு

முன்னதாக ஜெய்ப்பூரில் மாலை 4 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் - பெங்களூரு அணிகள் மோதுகின்றன. தலா 12 புள்ளிகளுடன் உள்ள இந்த இரு அணிகளுக்கும் இதுதான் கடைசி லீக் ஆட்டம். இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி 14 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை பிரகாசமாக்கிக் கொள்ளும். தோல்வியுறும் அணி போட்டியிலிருந்து வெளியேறும். வெற்றிக்காக இரு அணிகளும் வரிந்துகட்டும் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கக்கூடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x