Last Updated : 23 May, 2018 08:27 AM

 

Published : 23 May 2018 08:27 AM
Last Updated : 23 May 2018 08:27 AM

இத்தாலியின் வலியை அறியுமோ கால்பந்து ?

21

-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரை வெகுவிமரிசையாக நடத்துவதற்காக ரஷ்யா முழு வீச்சில் தயாராகி உள்ளது. இந்த உலகக் கோப்பைப் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு வழங்கப்படும் கோப்பையானது இத்தாலி நாட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு உலகக் கோப்பை தொடருக்கான மாதிரி கோப்பையும் இங்குதான் வடிவமைக் கப்படுகிறது.

ஆனால் வேதனையிலும் வேதனை, இந்த தொடருக்கான கோப்பையை செதுக்கும் அந்த நாட்டு தேசிய அணி இம்முறை உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற முடியாததுதான். உலகக் கோப்பையில் பிரகாசிக்கும் வாய்ப்பை இழந்துள்ள இத்தாலி, கோப்பையை பளபளப்பாக்குவதன் மூலம் காயத்துக்கு மருந்து போட்டுக் கொண்டுள்ளது.

4 முறை சாம்பியனான இத்தாலி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தகுதி சுற்று ஆட்டத்தின் பிளே ஆஃபில் ஸ்வீடனிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து 1958-ம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக உலகக் கோப்பைத் தொடருக்கு தகுதி பெறமுடியாமல் வெளியேறியது. உலகக் கோப்பை தொடருக்கு இத்தாலி செல்ல முடியாவிட்டாலும், உலகக் கோப்பையே இத்தாலிக்கு வந்தது.

ஆமாம், ஒவ்வொரு 4 வருடங்களுக்கும் ஒருமுறை மிலன் நகருக்கு அருகில் உள்ள ஒரு தொழில்துறை நகரத்தில் பெயரிடப்படாத கட்டிடம் ஒன்றில் உலோகத் தூளின் மேகங்கள், அச்சகங்கள், சுத்தியலின் ஒலி ஆகியவற்றுக்கு மத்தியில் இத்தாலி நிறுவனம் ஒன்று உலகக் கோப்பை தொடருக்கான டிராபியை மறுசீரமைப்பு செய்து கொடுத்து வருகிறது.

மிலனின் புறகர் பகுதியான பதர்னோ துக்னானோவில் உள்ள ஜிடிஇ பெர்டோனி என்ற சிறிய நிறுவனம்தான் இந்தப் பணியை செய்து வருகிறது. 1971-ம் ஆண்டு பிரேசில் அணி 3-வது முறையாக உலகக் கோப்பையை வென்றதால் ஜூலியஸ் ரைமெட் டிராபியை அந்த அணி சொந்தமாக்கிக் கொண்டது.

இதன் பின்னர் தற்போது வழங்கப்பட்டு வரும் கோப்பையை வடிவமைத்தது ஜிடிஇ பெர்டோனி நிறுவனம்தான். இந்த அசல் கோப்பையானது ஒவ்வொரு 4 ஆண்டு காலங்களிலும் மறுசீரமைப்பு செய்வதற்காக 12 ஊழியர்களை மட்டுமே கொண்ட ஜிடிஇ பெர்டோனி நிறுவனத்தின் கைகளுக்கு வந்து சேருகிறது.

1938-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் இயக்குநராக தற்போது வெலண்டினா லோசா என்ற பெண்மணி இருந்து வருகிறார். அசல் உலகக் கோப்பையை வடிவமைத்தது இந்த நிறுவனத்தின் கலை இயக்குநரும், சிற்பியுமான சில்வியோ காசானிகாதான். அதேவேளையில் உலகக் கோப்பையின் மேல் உலக உருண்டை போன்ற வடிவத்தை இடம் பெறச் செய்வதற்கான ஆலோசனையை வெலண்டினா லோசாவின் தந்தை ஜியோர்ஜியோவே வழங்கியுள்ளார்.

வெலண்டினா லோசா கூறும்போது, “அசல் உலகக் கோப்பை எங்களிடம் வரும்போது எப்போதுமே ஒரு சிறப்பான உணர்வு எங்களுக்குள் ஏற்படும். அசல் எப்போதுமே அசல்தான். அசலான மோனலிசா ஓவியத்தை பார்ப்பதற்கும் அதன் நகலை பார்ப்பதற்கும் இடையிலான வித்தியாசம் போன்றதுதான் இது.

நாங்கள் வடிவமைத்த கோப்பையை முதன் முதலாக கையில் ஏந்தியது 1974-ம் ஆண்டு ஜெர்மனி அணியின் கேப்டன் ஃப்ரான்ஸ் பெக்கன்பேவர்தான். கோப்பையை வடிவமைப்பதற்காக உலகம் முழுவதிலும் இருந்து 53 திட்ட வரைவுகள் வந்தன. ஆனால் நாங்கள் மட்டும்தான் மாதிரியை வடிவமைத்துக் கொடுத்தோம்” என்றார்.

ஒவ்வொரு உலகக் கோப்பை தொடர் முடிந்த பிறகும் ஃபிபா அமைப்பானது 38 செ.மீ. உயரம் மற்றும் 6 கிலோ தங்கம், மலாகிட் எனும் கற்கள் பதிக்கப்பட்ட டிராபியை பொலிவு பெறச் செய்வதற்காக ஜிடிஇ பெர்டோனி நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கிறது. அந்த நிறுவனத்தின் ஊழியர்களில் ஒருவரான பீட்டோ பிராம்பில்லா கூறும்போது, “4 ஆண்டுகாலத்தில் கோப்பை பல்வேறு இடங்களுக்கு பயணிப்பதால் சிறிய அளவில் சேதம் ஏற்படும். இதை நாங்கள் சரி செய்து கொடுப்போம்.

ஒவ்வொரு முறையும் வெற்றி பெறும் அணியின் கேப்டன் கோப்பையை கைகளில் ஏந்தும் போது எனது கண்களில் இருந்து கண்ணீர் நிரம்பி வழியும், ஏனெனில் எங்களது கைகளில் இருந்து உலகக் கோப்பை செல்கிறதே என்ற ஏக்கம்தான்.

அது ஒரு அற்புதமான உணர்வு. உலகக் கோப்பையை நாங்கள் கையில் ஏந்தியுள்ளோம் என பெரும்பாலான மக்கள் கூறமுடியாதல்லவா அதுதான்” என்றார்.

அசல் கோப்பையை வடிவமைத்துள்ள பெர்டோனி நிறுவனம் அதன் மாதிரியை செய்வதிலும் மெனக்கெட வேண்டி உள்ளது. இந்த மாதிரி டிராபிதான் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிகள் தங்கள் நாட்டுக்கு கொண்டு செல்லும்.

அசல் கோப்பையானது தொடர்ச்சியாக 3 ஆண்டுகள் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்குதான் சொந்தமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மாதிரி டிராபியானது வெண்கலத்தில் செய்யப்படுகிறது. அதன் பின்னர் 24 காரட் தங்க முலாம் பூசப்பட்டு பளபளப்பு கூட்டப்படுகிறது.

ஜூலை 15-ம் தேதி நெய்மர் (பிரேசில்), லயோனல் மெஸ்ஸி (அர்ஜென்டினா), ஹ்யூகோ லொரிரிஸ் (பிரான்ஸ் ), செர்ஜியோ ரமோஸ் (ஸ்பெயின்), மானுவல் நெவர் (ஜெர்மனி) ஆகியோரில் யாராவது ஒருவரது கைகளில் உலகக் கோப்பை அசல் டிராபி தவழ்ந்தாலும் ஒரு சில மாதங்களில் மீண்டும் அது இத்தாலியில் உள்ள தொழில்துறை நகரத்தின் ஒரு மூலையில் உள்ள நிறுவனத்தில் தஞ்சம் அடைய காத்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x