மார்னஸ் லபுஷேன் சதம்: 593 ரன்களை சமன் செய்து கவுண்டி அணி வரலாறு!

மார்னஸ் லபுஷேன் சதம்: 593 ரன்களை சமன் செய்து கவுண்டி அணி வரலாறு!
Updated on
2 min read

செல்டன்ஹாமில் நேற்று முடிவடைந்த கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் குளஸ்டர்ஷயர் அணியும் கிளாமர்கன் அணியும் போட்டியை வரலாற்று ‘டை’ செய்தது. 593 ரன்கள் வெற்றி இலக்கை சேஸ் செய்து கிளாமர்கன் அணி 592 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி போட்டி வரலாற்று டை ஆனது.

குளோஸ்டர்ஷயர் அணி 179 மற்றும் 610/8 டிக்ளேர் செய்ய கிளாமர்கன் 197 மற்றும் 592 ரன்கள். கிளாமர்கன் கேப்டன் சாம் நார்த்ஈஸ்ட் சேசிங்கின் போது 187 ரன்களை விளாச, ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஷேன் 119 ரன்களை எடுத்தார். இறுதி நாளில் அதிக இலக்கை விரட்டும் வரலாற்றுச் சாதனை குளஸ்டர் ஷயர் விக்கெட் கீப்பரின் கிரேட் கேட்சினால் முறியடிக்கப்பட்டது.

கடைசி பேட்டர் ஜேமி மெக்கில்ராய் கடைசி பந்தில் 1 ரன் எடுக்க வேண்டும் எடுத்தால் வரலாற்று சேசிங் மற்றும் வெற்றியாகியிருக்கும். ஆனால் அஜீத் சிங் டேல் என்ற பவுலர் வீசிய கடைசி பந்தை மெக்கில்ராய் எட்ஜ் செய்ய குளஸ்டர் ஷயர் விக்கெட் கீப்பர் ஜேம்ஸ் பிரேசி அற்புதமான கேட்சை எடுக்க டை ஆனது. முதல் தரக் கிரிக்கெட்டில் 2010-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற துலீப் டிராபி போட்டியில் தெற்கு மண்டல அணிக்கு எதிராக மேற்கு மண்டல அணி 536 ரன்கள் 4வது இன்னிங்ஸ் வெற்றி இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்ததுதான் இதுவரை சாதனையாக இருந்து வருகிறது.

இந்தப் போட்டியில் 593 ரன்கள் இலக்கை எதிர்த்து 592 ரன்கள் என்று வரலாற்று டை ஆனதால் துலிப் டிராபி சாதனை வெற்றி அளவில் இன்னும் அதிக ரன் சேஸ் சாதனையாக நீடிக்கின்றது. கிளாமர்கன் அணிக்கு கடைசி 10 ஒவர்களில் 32 ரன்களே தேவைப்பட்டன. மேசன் கிரேன் என்ற வீரர் பிரமாதமாக ஆடி 43 நாட் அவுட் என்று எதிர்முனையில் தேங்கி விட்டார். ஆனால் அஜீத் சிங் டேல் அற்புதமாக கடைசி ஓவரை வீசியதில் கிளாமர்கனின் வரலாற்று வெற்றி சாத்தியமில்லாமல் போனது.

கடந்த 6 ஆண்டுகளில் இது கவுண்டி கிரிக்கெட்டில் முதல் டை. இங்கிலாந்தில் நடைபெறும் முதல்தர கிரிக்கெட்டில் 593 என்பதே அதிகபட்ச 4-வது இன்னிங்ஸ் ஸ்கோராகும். உலக அளவில் 3வது அதிகபட்ச 4-வது இன்னிங்ஸ் ஸ்கோராகும்.

ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஷேன் 3 பவுண்டரிகளை ஒரே ஓவரில் விளாசி 148 பந்துகளில் சதம் கண்டார். பிறகு 165 பந்துகளில் 17 பவுண்டரிகளுடன் 119 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நார்த் ஈஸ்ட் என்ற வீரருடன் சேர்ந்து 153 ரன்கள் கூட்டணி அமைத்தார் லபுஷேன்.

கடைசி 38 ஓவர்களில் 140 ரன்கள் தேவையாக இருந்தது. இதை நார்த் ஈஸ்ட் முடித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவரும் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து டெய்லர் பந்தில் ஆட்டமிழந்தார். 544/8 என்ற நிலையில் வான் டெர் கார்ட்டன் 31 ரன்களையும் எம்.எஸ்.கிரேன் 43 ரன்களையும் எடுக்க கடைசி பந்தில் மெக்கில் ராய் ஆட்டமிழந்ததால் 592 ரன்கள் என்று ஆட்டம் டை ஆனது. கவுண்ட்டி கிரிக்கெட் வரலாற்றில் மிக மிக த்ரில் டை ஆன போட்டி என்று இங்கிலாந்து கிரிக்கெட் வட்டாரங்களில் இந்தப் போட்டி விதந்தோதப்பட்டு வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in