Published : 16 May 2018 07:29 AM
Last Updated : 16 May 2018 07:29 AM

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 142 ரன்களுக்கு ராஜஸ்தான் ஆட்டமிழப்பு: 4 விக்கெட்களை சாய்த்து அசத்தினார் குல்தீப் யாதவ்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19 ஓவர்களில் 142 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணிக்கு ராகுல் திரிபாதி, ஜாஸ் பட்லர் ஜோடி அதிரடி தொடக்கம் கொடுத்தது. பிரஷித் கிருஷ்ணா வீசிய 2-வது ஓவரில் ராகுல் திரிபாதி ஒரு சிக்ஸரும், 3 பவுண்டரிகளும் விரட்டினார். ஷிவம் மாவி வீசிய அடுத்த ஓவரில் ஜாஸ் பட்லர் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் என ஒரே ஓவரில் 28 ரன்கள் விளாசி மிரளச் செய்தார். சுனில் நரேன் வீசிய 4-வது ஓவரில் ஜாஸ் பட்லர், ராகுல் திரிபாதி ஆகியோர் தலா ஒரு பவுண்டரி விரட்ட அந்த ஓவரில் 10 ரன்கள் எடுக்கப்பட்டது.

அதிரடியாக விளையாடிய ராகுல் திரிபாதி 15 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் எடுத்த நிலையில் ஆந்த்ரே ரஸ்ஸல் பந்தில் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு ராகுல் திரிபாதி, பட்லருடன் இணைந்து 4.5 ஓவர்களில் 63 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து கேப்டன் அஜிங்க்ய ரஹானே களமிறங்கினார். பவர்பிளேவில் 68 ரன்கள் சேர்க்கப்பட்டது. நிதானமாக விளையாடிய ரஹானே 12 பந்துகளில், ஒரு பவுண்டரியுடன் 11 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய முயன்ற போது ஸ்டெம்பை பறிகொடுத்தார். இதையடுத்து சஞ்சு சாம்சன் களமிறங்கினார்.

குல்தீப் யாதவ் வீசிய அந்த ஓவரில் 5 ரன்களே சேர்க்கப்பட்டது. 9-வது ஓவரை வீசிய பிரஷித் கிருஷ்ணா 6 ரன்களை விட்டுக்கொடுத்தார். அடுத்த ஓவரை வீசிய குல்தீப் யாதவ், ஜாஸ் பட்லரை ஆட்டமிழக்கச் செய்து திருப்புமுனையை ஏற்படுத்தினார். பட்லர், ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் மேற்கொண்ட போது சியர்லஸிடம் கேட்ச் ஆனது. அவர், 22 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் சேர்த்தார். அப்போது ஸ்கோர் 9.2 ஓவர்களில் 85 ஆக இருந்தது. இதைத் தொடர்ந்து பென் ஸ்டோக்ஸ் களமிறங்கினார். 10 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 92 ரன்கள் சேர்த்தது.

சுனில் நரேன் வீசிய 11-வது ஓவரில் சஞ்சு சாம்சன் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். சாம்சன் 10 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 12 ரன்கள் சேர்த்தார். 4 ஓவர்கள் இடைவெளியில் 19 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து ராஜஸ்தான் அணி நெருக்கடிக்கு உள்ளான நிலையில் களமிறங்கிய ஸ்டூவர்ட் பின்னி 4 பந்தில் ஒரு ரன் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தில் தினேஷ் கார்த்திக்கின் மின்னல் வேக ஸ்டெம்பிங்கால் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய கிருஷ்ணப்பா கவுதம் (3), ஷிவம் மாவி வீசிய பவுன்சர் பந்தில் தினேஷ் கார்த்திக்கிடம் பிடிகொடுத்து நடையை கட்டினார்.

அவரை தொடர்ந்து பென் ஸ்டோக்ஸ் 13 பந்தில் 11 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். 107 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்த நிலையில் ஷிவம் மாவி வீசிய 15-வது ஓவரில் தலா ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி விரட்டிய ஜெயதேவ் உனத்கட், சுனில் நரேன் வீசிய அடுத்த ஓவரிலும் 2 பவுண்டரிகள் அடித்தார். அவருக்கு உறுதுணையாக சிறிது நேரம் களத்தில் நின்ற இஷ் சோதி 6 பந்தில் ஒரு ரன் எடுத்த நிலையில் பிரஷித் கிருஷ்ணா பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஜோப்ரா ஆர்ச்சர் 5 பந்தில், 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆந்த்ரே ரஸ்ஸல் பந்தில், சுப்மான் கில்லிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

கடைசி வீரராக ஜெயதேவ் உனத்கட் 18 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுத்த நிலையில் பிரஷித் கிருஷ்ணா பந்தில் போல்டாக ராஜஸ்தான் அணி 19 ஓவர்களில் 142 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அனுரீத் சிங் 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். கொல்கத்தா தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்கள் வீழ்த்தினார். இதையடுத்து 143 ரன்கள் இலக்குடன் கொல்கத்தா பேட் செய்ய ஆயத்தமானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x