

சென்னை: தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 603 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்தது.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் இந்திய மகளிர் அணி முதல் நாள் ஆட்டத்தில் 98 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 525 ரன்கள் குவித்தது.ஸ்மிருதி மந்தனா 149, ஷபாலி வர்மா 205 ரன்கள் விளாசினர். சுபா சதீஷ் 15, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 55 ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 42, ரிச்சா கோஷ் 43 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடர்ந்து விளையாடியது.
இருவரும் அரை சதம் கடந்தனர். 109 ஓவர்களில் இந்திய அணி 575 ரன்கள் குவித்திருந்தது. அன்னெரி டெர்க்சன் வீசிய 110-வது ஓவரின் முதல் பந்தை ரிச்சா கோஷ் பவுண்டரிக்கு விரட்ட மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது. இதற்கு முன்னர் கடந்த பிப்ரவரி மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 575 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது. இதை தற்போது இந்திய மகளிர் அணி முறியடித்து புதிய சாதனை நிகழ்த்தி உள்ளது.
5-வது விக்கெட்டுக்கு 143 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில் ஹர்மன்பிரீத் கவுர், ரிச்சா கோஷ் ஜோடி பிரிந்தது. ஹர்மன்பிரீத் கவுர் 115 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 69 ரன்கள் எடுத்த நிலையில் துமி செகுகுனே பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து தீப்தி சர்மா களமிறங்கினார். சிறப்பாக விளையாடி வந்த ரிச்சா கோஷ் 90 பந்துகளில், 16 பவுண்டரிகளுடன் 86 ரன்கள் எடுத்த நிலையில் லபா பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.
அப்போது இந்திய அணி 115.1 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 603 ரன்கள் குவித்திருந்தது. அத்துடன் முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக இந்திய அணி அறிவித்தது. தீப்தி சர்மா 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் டெல்மி டக்கர் 2 விக்கெட்களை வீழ்த்தினார். நதின் டி கிளெர்க், துமி செகுகுனே. லபா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 72 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்தது.
தொடக்க வீராங்கனைகளான லாரா வோல்வார்ட் 20, அன்னேக் போஷ் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்னே ராணா பந்தில் ஆட்டமிழந்தனர். சிறப்பாக விளையாடிய சுனே லஸ் 164 பந்துகளில், ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்த நிலையில் தீப்தி சர்மா பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். இதையடுத்து களமிறங்கிய டெல்மி டக்கர் ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஸ்னே ராணா பந்தில் நடையை கட்டினார்.
மரிஸான் காப் 125 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 69 ரன்களும், நதின் டி கிளெர்க் 27 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி தரப்பில் ஸ்னே ராணா 3 விக்கெட்களை வீழ்த்தினார். தீப்தி சர்மா ஒரு விக்கெட் கைப்பற்றினார். கைவசம் 6 விக்கெட்கள் இருக்க 367 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்றைய 3-வது நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது தென் ஆப்பிரிக்க மகளிர் அணி.