

காயத்திலிருந்து மீண்டு பிரேசில் கால்பந்து வீரர் நெய்மார் மீண்டும் பயிற்சி செய்யத் தொடங்கியுள்ளார்.
கால்பந்து வாழ்க்கையையே முடக்கி விடக்கூடிய காயத்திலிருந்து பிரேசில் கால்பந்து நட்சத்திர வீரர் நெய்மர் மீண்டு வந்துள்ளார். இவர் பார்சிலோனாவில் கால்பந்து பயிற்சியைத் தொடங்கியுள்ளார்.
2014 உலகக் கோப்பைக் கால்பந்து போட்டித் தொடரில் கொலம்பியாவுக்கு எதிரான பரபரப்பான காலிறுதி ஆட்டத்தில் கொலம்பிய வீரர் யுவான் காமிலோ சுனைகாவின ஆக்ரோஷ ஆட்டத்தினால் முதுகுத் தண்டில் முறிவு ஏற்பட்டு போட்டியிலிருந்து நெய்மார் விலக நேரிட்டது.
அவரது விலகலால் பிரேசிலின் கனவு தகர்ந்ததும் அறியப்பட்ட ஒன்றே.
இந்நிலையில் அவர் நேற்று ஸ்பெயினில் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு பயிற்சியில் ஈடுபட்டார்.
தொடர்ந்து அவர் முறையான பயிற்சிக்குத் திரும்புவது அவரது உடற்தகுதியில் ஏற்படும் முன்னேற்றத்தைப் பொறுத்தது என்று பார்சிலோனா கால்பந்து கிளப் தெரிவித்துள்ளது.
ஸ்பானிய கால்பந்து லீக் சீசன் தொடங்கவுள்ள நிலையில் அர்ஜெண்டீனா வீரர் லயோனல் மெஸ்ஸியும் பயிற்சிக்குத் திரும்பியுள்ளார்.
ஆகஸ்ட் 24ஆம் தேதி பார்சிலோனா அணி எல்கே என்ற அணியை எதிர்கொள்கிறது.