Published : 11 May 2018 03:21 PM
Last Updated : 11 May 2018 03:21 PM

அஸ்வின் முன்னால் இறங்கிய விவகாரம்: ப்ரீத்தி ஜிந்தா, சேவாக் இடையே மோதல்?

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அடைந்த தோல்வியை அடுத்து அணி உரிமையாளர் பிரீத்தி ஜிந்தாவுக்கும் அணியின் ஆலோசகர் விரேந்திர சேவாகுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து அணியின் செயல்பாட்டில் தலையீடு இருப்பதாக அதிருப்தி அடைந்துள்ள சேவாக் இந்த சீசனுடன் கிங்ஸ் லெவன் அணியுடனான தனது 5 ஆண்டுகால உறவை முடித்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளதாகவும் தெரிகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக அன்று கிங்ஸ்லெவன் அணி வெற்றி பெற முயற்சியே செய்யாமல் தோல்வி அடைந்தது, மேலும் கேள்விக்குரிய சில முடிவுகளை கிங்ஸ் லெவன் எடுத்தது, அதில் ஒன்று அஸ்வினை 3ம் நிலையில் களமிறக்கியதும் சர்ச்சையானது.

கருண் நாயர், மனோஜ் திவாரி இருக்கும் போது அஸ்வின் மூன்றாம் நிலையில் இறங்கியதும் பிரச்சினையாகியுள்ளது. அஸ்வின் டக் அவுட் ஆனார்.

இதனையடுத்து ஏன் அஸ்வினை 3ம் நிலையில் இறக்க வேண்டும் என்று சேவாகிடம் விளக்கம் கேட்டுள்ளார் அணியின் சக உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா. ஆனால் சேவாக் அளித்த பதில் ஜிந்தாவுக்கு திருப்திகரமாக இல்லை. இதனையடுத்து ப்ரீத்தி அதிருப்தி அடைந்துள்ளதாகவும், தன் வழிமுறைகளில் அவர் குறுக்கிட்டதற்காக சேவாகும் பரஸ்பர அதிருப்தியில் இருப்பதாக கிங்ஸ் லெவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அணியின் மற்ற உரிமையாளர்களான வாடியா, மோஹித் பர்மனிடம் சேவாக், பிரீத்தி ஜிந்தா தன் விஷயங்களில் அதிகம் தலையீடு செய்கிறார் என்று புகார் கூறியுள்ளார்.

ஆனால் ஆட்டம் முடிந்த பிறகு ஜிந்தா-சேவாக் இடையே நடந்த பேச்சு சாதாரணமானது, வழக்கமானது என்றும் “இருவரிடமும் பேசிவிட்டதாகவும் பிரச்சினை இல்லை” என்று மோஹித் பர்மன் தெரிவித்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் 12 புள்ளிகள் பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x