“இது நம் கோலியே அல்ல” - மோசமான ஆட்டத்தால் ரசிகர்கள் அதிருப்தி | T20 WC

“இது நம் கோலியே அல்ல” - மோசமான ஆட்டத்தால் ரசிகர்கள் அதிருப்தி | T20 WC
Updated on
1 min read

கயானா: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் விராட் கோலியின் மோசமான ஆட்டம் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. 8 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்துள்ளது இந்தியா. இந்த சூழலில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

மேற்கு இந்தியத் தீவுகளின் கயானாவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச முடிவு செய்தது. கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். 9 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து கோலி ஆட்டமிழந்தது ரசிகர்களுக்கு கடும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் கோலியின் ஆட்டம் அவரது தரத்துக்கு ஏற்ற வகையில் இல்லை என்று ரசிகர்கள் விமர்சித்து வந்தனர். அரையிறுதி ஆட்டத்துடன் சேர்த்து ஏழு இன்னிங்ஸில் மொத்தம் 75 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவர் நாக் அவுட் சுற்றில் அசத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெறும் 9 ரன்களில் அவர் வெளியேறியது சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தி அலையை ஏற்படுத்தியுள்ளது.

மீம்களின் வாயிலாக ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் சோகத்தை பதிவு செய்து வருகின்றனர். இவை வைரலாக பரவி வருகிறது.

விராட் கோலி, பிக் மேட்ச் பிளேயர் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், மீண்டும் ஒருமுறை இந்த ஆட்டத்தில் அது பொய்த்துள்ளது. முதல் பந்தில் இருந்தே அதிரடியாக ஆடி ரன் குவிப்பது இந்த தொடரில் இந்தியாவின் பேட்டிங் அணுகுமுறையாக உள்ளது. இந்த ஆட்டமுறை கோலியின் வீழ்ச்சிக்கு காரணம் என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in