Published : 26 Jun 2024 07:05 AM
Last Updated : 26 Jun 2024 07:05 AM
லைப்சிக்: யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியனான இத்தாலி அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
ஜெர்மனியில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று ‘பி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இத்தாலி - குரோஷியா அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணிகள் தரப்பில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. 54-வது நிமிடத்தில் குரோஷியா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதில் லூகா மோட்ரிச் அடித்த ஷாட்டை இத்தாலி கோல் கீப்பர் கியான்லூகி அற்புதமாக தடுத்தார். எனினும் அடுத்த நிமிடத்திலேயே லூகா மோட்ரிச் கோல் அடித்து அசத்தினார். இதனால் குரோஷியா அணி 1-0 என முன்னிலை பெற்றது.
நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களின் முடிவில் குரோஷியா 1-0 என முன்னிலையில் இருந்தது. இதையடுத்து காயங்களுக்கு இழப்பீடாக 8 நிமிடங்கள் வழங்கப்பட்டன. இதில் 42 விநாடிகளே எஞ்சியிருந்த நிலையில் இத்தாலி வீரர் ரிக்கார்டோ கலாஃபியோரி விரைவாக கடத்தி கொடுத்த பந்தை மாட்டியா சக்காக்னி அற்புதமாக கோல் வலைக்குள் திணிக்க ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.
இதன் மூலம் இத்தாலி அணி 4 புள்ளிகளுடன் தனது பிரிவில் 2-வது இடம் பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. அந்த அணி 3 ஆட்டங்களில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிராவை பதிவு செய்துள்ளது. குரோஷியா அணி 2 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 2 ஆட்டங்களை டிராவில் முடித்த நிலையில் ஒரு ஆட்டத்தில் தோல்வி கண்டிருந்தது.
ஸ்பெயின் வெற்றி: இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் அல்பேனியாவை வீழ்த்தியது. ஆட்டத்தின் 13-வது நிமிடத்தில் ஃபெரான் டோரஸ் கோல் அடித்து அசத்தியிருந்தார். ஏற்கெனவே நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்த ஸ்பெயின் அணிக்கு இது ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது. இந்த வெற்றியால் அந்த அணி 9 புள்ளிகளுடன் லீக் சுற்றில் தனது பிரிவில் முதலிடம் பிடித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT