‘ஆப்கன் தொடருக்கு மறுப்பு... ஆஸி. கிரிக்கெட் வாரிய போலித்தனம்’ - உஸ்மான் கவாஜா சாடல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

ஆப்கானிஸ்தானுடன் ஆஸ்திரேலியா டி20 உலகக் கோப்பையில் சந்தித்த தோல்வி அந்த அணியுடன் இருதரப்பு தொடரில் ஆஸ்திரேலிய அணி ஆடாததே காரணம் என்றும். இந்த விஷயத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் நிலைப்பாடு மற்றும் அதன் பாசாங்கும், போலித்தனமும் என்று உஸ்மான் கவாஜா சாடியுள்ளார்.

இரண்டு முறை ஆஸ்திரேலியா ஆப்கனுடனான போட்டியை ரத்து செய்தது. ஒரு டெஸ்ட் மற்றும் ஒரு டி20 போட்டியை ரத்து செய்துள்ளது ஆஸ்திரேலியா. இதற்கு என்ன காரணம் என்று கேட்ட போது கிரிக்கெட் ஆஸ்திரேலியா, “ஆப்கனின் தலிபான்களின் ஆட்சியில் பெண்களுக்கு எதிரான அடக்குமுறையும் மனித உரிமை மீறலுமே” என்றது.

அன்று ஆஸ்திரேலியாவை வீழ்த்திய போது ஆப்கான் கேப்டன் ரஷித் கான் சூட்சமாக ஒன்றைக் கூறினார், “அதெப்படி ஐசிசி தொடரில் எங்களுக்கு எதிராக ஆடலாம். ஆனால், இருதரப்பு தொடரில் ஆட முடியாது?” என்று கேள்வி எழுப்பினார். இந்நிலையில், இவரது கருத்தை ஆமோதிக்குமாறு உஸ்மான் கவாஜா ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றில் கூறும்போது, “ஆம்! ஆஸ்திரேலியா இருதரப்பு தொடரில் ஆப்கனுடன் ஆடியிருக்க வேண்டும்.

இந்தப் புதிரின் இரு தரப்பு நியாயத்தையும் நான் கருணையுடன் தான் பார்க்கிறேன். மகளிர் உரிமைகள், மகளிர் கிரிக்கெட் குறித்து ஆப்கான் நிலைமைகளைப் பரிசீலிக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தையும் மதிக்கிறேன். அதே சமயத்தில் கிரிக்கெட் ஆட்டத்தை வளர்ப்பதையும் விரும்புகிறேன்.

ஆஸ்திரேலியா இருமுறை ஆப்கன் உடனான இருதரப்பு தொடரிலிருந்து விலகியுள்ளது. ரஷித் கானிடம் இது குறித்து பேசினேன். ஆப்கன் மக்கள் கிரிக்கெட்டை நேசிப்பதைப் பற்றி உயர்வாகக் கூறினார். கிரிக்கெட் தான் அம்மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆஸ்திரேலியாவுடன் மேட்ச் என்றால் அவர்களுக்கு பெரிய விஷயம், பெரிய நிகழ்வு. இது நடக்காத போது அந்த மக்கள் காயப்படுத்தப்படுகின்றனர்.

மக்கள் வேறு. அரசாங்கம் வேறு. ஆப்கானிஸ்தானுடன் கிரிக்கெட் ஆடப்போவதில்லை என்று நாம் கூறிவிட்டு அவர்களை பிக்பாஷ் லீகில் ஆட வைப்பது நிச்சயம் அது கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் இரெண்டுங்கெட்டான் நிலைப்பாட்டையும் பாசாங்குத்தனத்தையுமே காட்டுகிறது. 100% ஆப்கனுடன் ஆஸ்திரேலியா இருதரப்பு தொடரில் ஆட வேண்டும், அது எப்படி ஒன்றில் ஆடுவோம் ஒன்றில் ஆடமாட்டோம் என்று கூற முடியும்? என்று உஸ்மான் கவாஜா சாடியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in