Published : 14 May 2018 07:10 PM
Last Updated : 14 May 2018 07:10 PM

‘சேஸிங்கில்’ விராட் கோலி சாதித்ததை சச்சின் கூட சாதிக்கவில்லை: ஷேன் வார்ன் புகழாரம்

இலக்கை விரட்டிச் செல்லுதலில் விராட் கோலி சாதித்தை சச்சின் டெண்டுல்கர் கூட சாதிக்கவில்லை என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்ன் புகழாரம் சூட்டியுள்ளார்.

ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளரும், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரருமான ஷேன் வார்ன் ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

ஒருநாள் போட்டிகளில் எதிரணியின் இலக்கைத் துரத்திச்சென்று சதம் அடித்ததில் விராட் கோலியின் பேட்டிங் அற்புதமாக இருந்து வருகிறது. பலமுறை சேஸிங்கில் அணியை வெற்றி பெறவைத்தது மட்டுமல்லாமல், விராட் கோலி தானும் சதம் அடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ஒருநாள் போட்டியில் சச்சின் 51 சதங்கள் அடித்துள்ள நிலையில், அவருக்கு அடுத்த இடத்தில் 35 சதங்களுடன் விராட் கோலி மட்டுமே இருக்கிறார். சேஸிங்கில் எந்த வீரரும் செய்ய முடியாததை, சச்சின் கூட செய்யமுடியாததை விராட் கோலி செய்து வருகிறார் என்பதே எனது கருத்தாகும்.

கிரிக்கெட் விளையாடும் எனது தலைமுறைக்கு சிறந்த பேட்ஸ்மேன்கள் என்றால், அது சச்சின் டெண்டுல்கரையும், பிரையன் லாராவை மட்டுமே குறிப்பிடுவேன்.

இப்போதுள்ள வீரர்களில் விராட் கோலி, டீவில்லியர்ஸ் இருந்தாலும், இருவரும் தனித்தனி வீரர்கள். இருவரையும் ஒரே தட்டில் வைத்துப் பார்ப்பது கடினம்.

நான் பார்த்தவகையில் விராட் கோலியின் பேட்டிங் மிகச்சிறப்பாக இருக்கிறது. அற்புதமான பேட்டிங், திறமையான வீரர், களத்தில் அவரின் ஆக்ரோஷம், ஆவேச உணர்வு என்னை ஈர்த்துவிட்டது.

அடுத்த 10 ஆண்டுகளுக்கு விராட் கோலி கிரிக்கெட்டை தொடர்ந்து விளையாடி வந்தால் சச்சின் டெண்டுல்கரை எந்த அளவுக்கு இன்று புகழந்து பேசுகிறோமோ அதே அளவுக்கு பேசப்படுவார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் தொடர் அனைத்தும் மிகவும் விறுவிறுப்பாக அமையும் என நம்புகிறேன். கடந்த தொடரில் விராட் கோலி சிறப்பாகச் செயல்படவில்லை என நினைக்கிறேன். அதற்காக முன்கூட்டியே பயிற்சிக்காக கவுண்டி அணியில் அவர் பங்கேற்று விளையாடுவது புத்திசாலித்தனமானது.

இந்த தொடரில் இங்கிலாந்து அணிக்கு விராட் கோலி மிகப்பெரிய சவாலாக மாறுவார். அடுத்து வரும் ஆஸ்திரேலிய தொடரிலும் விராட் கோலியின் பேட்டிங் பெரிய அளவில் பேசப்படும். கடந்த தொடரில் சிறப்பாக விளையாடியதைக் காட்டிலும் இந்த முறை கோலியின் பேட்டிங் சவாலாக இருக்கும். ஆஸ்திரேலியாவில் விராட் கோலியின் பேட்டிங்கை பார்க்க ஆர்வமாக இருக்கிறேன்.

இவ்வாறு ஷேன் வார்ன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x