Published : 23 Jun 2024 02:39 PM
Last Updated : 23 Jun 2024 02:39 PM

“இந்த வெற்றிக்காகத்தான் காத்திருந்தோம்... கடவுளே நன்றி” - ஆப்கன் ஆட்ட நாயகன் நயீப்

எதிர்பாராதது என்று சொல்ல முடியாது. ஏனெனில் 2023 ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பையிலேயே ஆப்கனிடம் ஆஸ்திரேலியா படுதோல்வி அடைந்திருக்க வேண்டும். முஜிபுர் ரஹ்மான், கிளென் மேக்ஸ்வெலுக்கு விட்ட கேட்சை அடுத்து மேக்ஸ்வெல் வெங்கலகடையில் யானை புகுந்தது போல் புகுந்து விளாசி ஆஸ்திரேலியாவை வெற்றிபெறச் செய்தார். அது அன்று. ஆனால் இன்று ஆப்கன் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே கிளென் மேக்ஸ்வெல்தான் நின்று கொண்டிருந்தார். ஆனால் இன்றைய நாயகன் குல்புதீன் நயீப் அவரை ஆட்டிப்படைத்ததோடு வீழ்த்தியும் விடவே ஆப்கன் வெற்றிக் கனவு பலித்தது.

டாஸ் வென்று ஆப்கானிஸ்தானை முதலில் பேட் செய்ய அழைத்து முதல் தவறைச் செய்தார் மிட்செல் மார்ஷ். அடுத்து, மிட்செல் ஸ்டார்க்கை ட்ராப் செய்தது ஆகப்பெரும் தவறு. டாஸ் வின் செய்தால் பேட்டிங் ஆடி, 170 ரன்களை அடித்து விட்டு எதிரணியை மடக்குவதுதான் சிறந்த அணிகளின் வழிமுறையாகும்.

ஆனால் ஏதோ ஆப்கானிஸ்தானை 100 ரன்களுக்குச் சுருட்டி விட்டு அதை 9 ஓவர்களில் முடிக்க ஆப்கன் ஒன்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸும் அல்ல, ஆஸ்திரேலியாவோ சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போன்ற ஐபிஎல் அணியும் அல்ல. கொஞ்சம் காமன்சென்ஸ் தேவை, அது ஆஸ்திரேலியாவுக்கு இன்று இல்லை.

நவீன் உல் ஹக்கின் அற்புதமான இன்ஸ்விங் பந்து, அதாவது நவீன் உல் ஹக்கிற்கு இன்ஸ்விங் ட்ராவிஸ் ஹெட்டிற்கு அவுட் ஸ்விங் என்பதால் அலட்சியமாக மட்டையை விட்டு பவுல்டு ஆனார். ஆப்கானிஸ்தானை ஏதோ அடித்து நொறுக்கி விட வேண்டும் என்ற வெறியில் தனக்குத்தானே தெனவெடுக்கக் குழி தோண்டிக் கொண்டது ஆஸ்திரேலியா. குல்பதீன் நயீபின் ஸ்லோயர் ஒன் பந்துகளும் கட்டர்களும் அவர்களது பயிற்சியாளர் டிவைன் பிராவோவின் கொடை என்பது தெளிவு.

இரண்டு குறை மதிப்பீட்டு பவுலர்கள் நவீன் உல் ஹக் 3 விக்கெட்டுகளைச் சாய்க்க, குல்பதீன் நயீப் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, 127 ரன்களுக்கு ஆஸ்திரேலியா சுருண்டு ஆப்கனுக்கு வரலாற்று வெற்றியைப் பரிசாக அளித்தது. அதுவும் கிளென் மேக்ஸ்வெலுக்கு நயீப் பந்தில் நூர் அகமது பிடித்த கேட்ச் ஆகச்சிறந்த கேட்ச். நெருக்கடியில் அப்படிப்பட்ட கேட்சை முன்னால் டைவ் அடித்துப் பிடிப்பது சாதாரணமல்ல.

மேக்ஸ்வெல் ஆட்டமிழந்தவுடனேயே 106/6 என்று ஆனது ஆஸி. இவருடன் ஸ்டாய்னிஸ், கமின்ஸ், டிம் டேவிட் என்று முக்கிய விக்கெட்டுகளைச் சாய்த்தார் நயீப். முன்னதாக, ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சத்ரான் இந்தப் போட்டியில் தங்களது மூன்றாவது தொடக்க சதக்கூட்டணியை அமைத்தனர். எந்தவொரு டி20 தொடரிலும் செய்யப்படாத சாதனையாகும் இது.

இந்நிலையில் ஆட்ட நாயகன் குல்பதீன் நயீப் கூறியதாவது: "இந்த வெற்றிக்காகவே நீண்ட காலம் காத்திருந்தோம். இது எனக்கு மட்டும் சிறந்த தருணம் அல்ல, என் மக்களுக்கு என் நாட்டுக்கும் சிறந்த தருணம். எங்கள் கிரிக்கெட்டுக்கு இது ஒரு பெரிய சாதனை. சொல்ல வார்த்தைகள் இல்லை. எங்களை ஆதரிக்கும் எங்கள் கிரிக்கெட்டை ஆதரிக்கும் ரசிகர்களுக்கு நன்றி.

கடந்த 2 மாதங்களாக கடினமாக உழைத்தோம். அதன் பலன் இப்போது உங்கள் கண் முன்னால். ஒருவழியாக, கடைசியில் ஆஸ்திரேலியாவையும் ஜெயித்து விட்டோம். கடவுளுக்கு நன்றி. எங்கள் கிரிக்கெட் பெரிய சாதனைகளை நிகழ்த்தியதில்லை. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் நிறைய இலக்குகளை எட்டியுள்ளோம். இது பெரிய சாதனை.

நாங்கள் முதல் ரவுண்ட்டில் நியூஸிலாந்தை வீழ்த்தினோம். பிறகு ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது எளிதல்ல. அவர்கள் உலக சாம்பியன் அணி. எங்கள் கிரிக்கெட்டுக்கு இந்த வெற்றி பெரிய சாதனை. இந்த வெற்றியை அடுத்தக் கட்டத்துக்கு முன்னேற்றுவோம். எங்கள் பயணம் இங்கு ஆரம்பிக்கிறது. அனைவருக்கும் நன்றி.” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x