Published : 21 Jun 2024 07:44 AM
Last Updated : 21 Jun 2024 07:44 AM
அட்லாண்டா: நடப்பு சாம்பியன் அர்ஜெண்டினா, பிரேசில் உள்ளிட்ட 16 அணிகள் கலந்து கொள்ளும் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி அமெரிக்காவில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினா, அறிமுகஅணியான கனடாவுடன் மோதுகிறது.
உலகக் கோப்பை, யூரோ கோப்பை கால்பந்து தொடருக்கு அடுத்து புகழ்பெற்றது கோபா அமெரிக்கா கால்பந்து தொடர். தென் அமெரிக்க கண்டங்களில் உள்ள அணிகள் இதில் கலந்து கொண்டு சாம்பியன் பட்டம் வெல்ல மோதும். இந்த தொடர் கடந்த 1916-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. 48-வது கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் அமெரிக்காவில் இன்று தொடங்குகிறது. இந்த கால்பந்து திருவிழா வரும் ஜூலை 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 32 ஆட்டங்கள் 14 மைதானங்களில் நடத்தப்படுகிறது.
தென் அமெரிக்க கண்டங்களைச் சேர்ந்த அர்ஜெண்டினா, பிரேசில், பொலிவியா, சிலி, கொலம்பியா, ஈக்வேடார், பராகுவே, பெரு, உருகுவே, வெனிசுலா ஆகிய 10 அணிகளும்வட அமெரிக்க கண்டத்தைச்சேர்ந்த அமெரிக்கா, மெக்சிகோ, ஜமைக்கா, பனாமா, கனடா, கோஸ்டா ரிகா ஆகிய 6 அணிகளும் என மொத்தம் 16 அணிகள் கலந்துகொள்கின்றன. இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
‘ஏ‘ பிரிவில் நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினா, கனடா, சிலி, பெரு அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘பி’ பிரிவில் மெக்சிகோ, ஜமைக்கா, வெனிசுலா, ஈக்வேடார் அணிகளும், ‘சி’ பிரிவில் அமெரிக்கா, பொலிவியா, உருகுவே, பனாமா அணிகளும், ‘டி’ பிரிவில் பிரேசில், கோஸ்டா ரிகா, கொலம்பியா, பராகுவே அணிகளும் உள்ளன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறும். கால் இறுதி ஆட்டங்கள் ஜூலை 4 முதல் 6 வரை நடைபெறுகின்றன. அரை இறுதி ஆட்டங்கள் ஜூலை 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடைபெறுகிறது. சாம்பியன் பட்டம் வெல்வது யார் என்பதை தீர்மானிக்கும் இறுதி ஆட்டம் ஜூலை 14-ம் தேதி மியாமி நகரில் நடைபெறுகிறது.
தொடக்க நாளான இன்று காலை 5.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான லயோனல் மெஸ்ஸிதலைமையிலான அர்ஜெண்டினா, அறிமுக அணியான கனடாவுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் அட்லாண்டாவில் உள்ள மெர்சிடஸ் பென்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. அர்ஜெண்டினா 16-வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறது.
கோபா அமெரிக்கா கால்பந்து தொடரை அமெரிக்கா 2-வது முறையாக நடத்துகிறது. இம்முறை வடஅமெரிக்காவைச் சேர்ந்த 6 அணிகள் புதிதாக களமிறங்குகின்றன. 9 முறை சாம்பியனான பிரேசில் அணி இம்முறை கேப்டன் நெய்மர் இல்லாமல் களமிறங்குகிறது. அவர், காயம் காரணமாக இந்தத் தொடரில் பங்கேற்கவில்லை. எனினும் அந்த அணியில் வினிசியஸ்ஜூனியர், அலிசன் பெக்கர் உள்ளிட்ட நம்பிக்கை அளிக்கக்கூடிய நட்சத்திர வீரர்கள் உள்ளனர்.
சாதனையை நோக்கி.. கோபா அமெரிக்கா கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்தவர்களின் பட்டியலில் அர்ஜெண்டினாவின் நோர்பெர்ட்டோ மென்டெஸ், பிரேசிலின் ஜிஜின்ஹோ ஆகியோர் முதலிடத்தில் உள்ளனர். இவர்கள் இருவரும் தலா 17 கோல்கள் அடித்திருந்தனர். இவர்களின் சாதனையை முறியடிக்க லயோனல் மெஸ்ஸிக்கு 5 கோல்களே தேவையாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT