

பார்படாஸ்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் ‘சூப்பர் 8’ சுற்றுப் போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடின. இதில் 47 ரன்களில் இந்தியா வெற்றி பெற்றது.
மேற்கு இந்தியத் தீவுகளின் பார்படாஸில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி 20 ஓவர்களில் 181 ரன்கள் குவித்தது. 182 ரன்கள் எடுத்த வெற்றி என்ற இலக்கை ஆப்கானிஸ்தான் விரட்டியது.
ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் ஹஜ்ரத்துல்லா ஜஸாய் இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரில் 11 ரன்களில் குர்பாஸ் ஆட்டமிழந்தார். பும்ரா அவரை வெளியேற்றினார். தொடர்ந்து இப்ராஹிம் ஸத்ரான், ஜஸாய் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
குல்பதின் நைப் 17, அஸ்மத்துல்லா 26, நஜிபுல்லா 19, நபி 14, கேப்டன் ரஷித் கான் 2, நவீன் உல் ஹக் 0, நூர் அகமது 12 ரன்களில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்கள் எடுத்து ஆட்டத்தில் தோல்வியை தழுவியது ஆப்கானிஸ்தான்.
இந்திய அணி சார்பில் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். குல்தீப் 2 விக்கெட்டுகள், ஜடேஜா மற்றும் அக்சர் தலா 1 விக்கெட் வீழ்த்தி இருந்தனர். பும்ரா 4 ஓவர்களில் 7 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார். இந்திய அணி அடுத்தப் போட்டியில் வங்கதேச அணியை எதிர்கொள்கிறது.
முன்னதாக, முதல் இன்னிங்ஸில் விராட் கோலி - ரோகித் சர்மா இணை ஓப்பனர்களாக களமிறங்கினர். 3ஆவது ஓவரிலேயே ரோகித் சர்மா 8 ரன்களுக்கு கேட்ச் கொடுத்து அவுட்டாகி வெளியேறினார். அடுத்து விராட் கோலியுடன் கைகோர்த்தார் ரிஷப் பந்த். ஆனால் அவரும் நிலைக்கவில்லை. 10 ரன்களில் எல்பிடபள்யூ முறையில் விக்கெட்டானார். அடுத்து கோலி 24 ரன்களில் கிளம்பினார். 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 79 ரன்களைச் சேர்த்திருந்தது.
சூர்யகுமார் யாதவ் - ஷிவம் துபே பாட்னர்ஷிப் அமைக்க துபே 10 ரன்களில் கிளம்பினார். சூர்யகுமார் யாதவ் அடித்து ஆட அவருக்கு ஹர்திக் பாண்டியா துணை நின்றார். ஒற்றை ஆளாக போராடி 53 ரன்களை சேர்த்த சூர்யகுமார் யாதவ் 17-வது ஓவரில் விக்கெட்டானார்.
ஹர்திக் 32 ரன்களுக்கும், ஜடேஜா 7 ரன்களுக்கும் பெவிலியன் திரும்பினர். கடைசி பந்தில் அக்சர் படேல் ரன் அவுட்டாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 181 ரன்களைச் சேர்த்தது. ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் ரஷித் கான், ஃபசல்ஹக் ஃபரூக்கி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், நவீன் உல் ஹக் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை சூர்யகுமார் யாதவ் வென்றார்.