

2010ஆம் ஆண்டு இந்தியா வந்த ஆஸ்திரேலிய அணியில் 203செமீ உயர வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் இருந்ததை நாம் அனைவரும் மறந்திருப்போம். ஆனால் அவரது முதல் டெஸ்ட் விக்கெட் உலகின் தலைசிறந்த சச்சின் டெண்டுல்கர்தான்.
பெங்களூருவில் நடைபெற்ற அந்த டெஸ்ட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 214 ரன்கள் எடுத்தார். அப்போது ஆஸ்திரேலியா அணியில் பெரிதும் பேசப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ‘2மீ உயர ஜார்ஜ்’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட பீட்டர் ஜார்ஜ். சச்சின் டெண்டுல்கர் அந்த மராத்தான் இன்னிங்சில் எதிர்கொண்ட 363வது பந்தில் பீட்டர் ஜார்ஜ் அவரை வீழ்த்தினார்.
அவர் வீசிய ரிவர்ஸ் ஸ்விங் பந்தை ஸ்கொயர் டிரைவ் ஆட முயன்ற சச்சின் டெண்டுல்கர் மட்டையில் பந்து சரியாகச் சிக்காமல் உள்விளிம்பில் பட்டு ஸ்டம்பைத் தொந்தரவு செய்தது. பீட்டர் ஜார்ஜ் தனது முதல் விக்கெட்டையே பரிசு விக்கெட்டாகப் பெற்றார்.
அந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்றது. பீட்டர் ஜார்ஜ் 2 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார். அதன் பிறகு அவர் பெயர் எங்கும் அடிபடவில்லை. காணாமல் போனார். அவர் எடுத்த 2வது விக்கெட் ஜாகீர் கான்.
அதன் பிறகு அடுத்த டெஸ்ட் போட்டியை அவர் இன்னும் ஆடவில்லை.
27 வயதாகும் இந்த வேகப்பந்து வீச்சாளர் இப்போது உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
“மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்குள் நிச்சயம் நான் நுழைவேன்” என்று சூளுரைத்துள்ளார். இதற்காக அவர் குவீன்ஸ்லாந்துக்குக் குடிபெயர்ந்துள்ளார்.