Published : 20 Jun 2024 08:39 AM
Last Updated : 20 Jun 2024 08:39 AM
செயின்ட் லூசியா: ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில்இன்று காலை 6 மணிக்கு செயின்ட் லூசியாவில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி, இரு முறை சாம்பியனான மேற்கு இந்தியத் தீவுகளுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
ரோவ்மன் பொவல் தலைமையிலான மேற்கு இந்தியத் தீவுகள் அணி லீக் சுற்றில் 4 ஆட்டங்களிலும் வெற்றி கண்டிருந்தது. கடைசியாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. பேட்டிங்கில் தனிப்பட்ட வீரரரை மட்டுமே சார்ந்திருக்காமல் இருப்பது அணியின் பெரியபலமாக உள்ளது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நிக்கோலஸ் பூரன் 98 ரன்கள் விளாசினார்.
நியூஸிலாந்து அணிக்கு எதிரானஷெர்`பேன் ரூதர்ஃபோர்ட் 68 ரன்களும், உகாண்டா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜான்சன் சார்லஸ் 44 ரன்களும், பப்புவா நியூகினியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஸ்டன் சேஸ் 42 ரன்களும் சேர்த்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கினர். இவர்களுடன் ரோவ்மன் பொவல், பிரன்டன்கிங், ஷாய் ஹோப், ஆந்த்ரே ரஸ்ஸல் ஆகியோரும் அதிரடியாக விளையாடுபவர்கள்.
பந்து வீச்சில் இடது கை சுழற்பந்து வீச்சாளரான அகீல் ஹோசைன் தொடக்க ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மற்றொரு சுழற்பந்து வீச்சாளரான குடகேஷ் மோதி நடு ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்துவதுடன் விக்கெட்களை கைப்பற்றி திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுப்பவராக திகழ்கிறார். வேகப்பந்து வீச்சில் அல்சாரி ஜோசப், ஓபெட் மெக்காய் ஆகியோர் வலு சேர்க்கக்கூடியவர்கள். இங்கிலாந்து அணியில் வலது கை பேட்ஸ்மேன்களுக்கு அகீல் ஹோசைன், குடகேஷ் மோதி சவால் அளிக்கக்கூடும்.
ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி லீக் சுற்றில் ஸ்காட்லாந்துடன் மோத இருந்தஆட்டம் மழையால் ரத்தானது.இதன் பின்னர் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டிருந்தது. கடைசி இரு ஆட்டங்களிலும் வெற்றி கண்டாலும், ஆஸ்திரேலிய அணி தனது கடைசி ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியை தோற்கடித்ததன் வாயிலாகவே இங்கிலாந்து அணி சூப்பர் 8 சுற்றில் விளையாடும் வாய்ப்பை பெற்றது.
சொந்த மண்ணில் டி 20 கிரிக்கெட்டில் பலம் வாய்ந்த அணியாக திகழும் மேற்கு இந்தியத் தீவுகள் அணியை வீழ்த்த வேண்டுமானால் இங்கிலாந்து அணி அனைத்து துறைகளிலும் மேம்பட்ட திறனை வெளிப்படுத்த வேண்டும். இன்றைய போட்டி நடைபெறும் செயின்ட் லூசியா மைதானம் பேட்டிங்குக்கு சாதகமானது. பவுண்டரி எல்லைகள் குறைந்த தொலைவு கொண்டதால் பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ரன் வேட்டை நிகழ்த்தக்கூடும். அதேவேளையில் ஆடுகளத்தில் கூடுதல் பவுன்ஸும் இருக்கும். இதனால் இடது கை பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிக்கக்கூடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT