Published : 31 Mar 2014 06:22 PM
Last Updated : 31 Mar 2014 06:22 PM

இங்கிலாந்துக்கு அதிர்ச்சியளித்த நெதர்லாந்து

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நெதர்லாந்து அணியிடம் 45 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி கண்டது இங்கிலாந்து.

இந்த வெற்றியின் மூலம் இந்த போட்டியின் பிரதான சுற்றில் தனது முதல் வெற்றியை நெதர்லாந்து பதிவு செய்தது. 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சிறிய அணியான நெதர்லாந்திடம் இங்கிலாந்து தோல்வியடைவது 2-வது முறையாகும். இதற்கு முன்பு 2009-ம் ஆண்டில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் நெதர்லாந்திடம் இங்கிலாந்து தோல்வியடைந்தது.

டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதையடுத்து நெதர்லாந்து அணியின் ஸ்வார்ட், மைபர்க் ஆகியோர் களமிறங்கினர். ஸ்வார்ட் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து மைபெர்க்குடன் பாரிஸி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடி ரன் சேர்த்தது. 11.1 ஓவர்களில் நெதர்லாந்து 84 ரன்களை எட்டியபோது 2-வது விக்கெட் விழுந்தது. மைபர்க் 39 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். பாரிஸி அதிகபட்சமாக 45 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து 5 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது.

134 ரன்கள் என்ற எளிதான இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணி, நெதர்லாந்து வீரர்களின் சிறப்பான பந்து வீச்சால் தொடக்கம் முதலே தடுமாறியது. லம்ப் 6, அலெக்ஸ் ஹேல்ஸ் 12, மொயின் அலி 3, மோர்கன் 6, ஜோஸ் பட்லர் 6 என அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.

பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கில் தொடர்ந்து தீவிரம் காட்டிய நெதர்லாந்து அணியினர் 88 ரன்களுக்கு இங்கிலாந்து அணியைச் சுருட்டினர். மிதவேகப் பந்து வீச்சாளர்கள் வான் பீக், முதாஸ்சர் புகாரி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இங்கிலாந்து வீரர்கள் மொத்தம் 4 பவுண்டரிகளை மட்டுமே அடித்தனர். போபாரா எடுத்த 18 ரன்களே அந்த அணியில் தனி ஒரு வீரரின் அதிகபட்ச ரன் ஆகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x