Published : 16 Jun 2024 06:46 AM
Last Updated : 16 Jun 2024 06:46 AM
முனிச்: 17-வது யூரோ கோப்பை கால்பந்து தொடர் ஜெர்மனியில் நேற்று தொடங்கியது. 24 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த தொடரின் முதல் லீக்ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ஜெர்மனி, ஸ்காட்லாந்துடன் மோதியது. 10-வது நிமிடத்தில்ஜெர்மனி முதல் கோலை அடித்தது. ஆடுகளத்தின் மையப்பகுதியில் இருந்து டோனி குரூஸ் உயரமாக அடித்த ஷாட்டை பெற்ற ஜோசுவா கிம்மிச் பந்தை பாக்ஸின் மையப்பகுதிக்கு சற்று வெளியே நின்ற 21 வயதான புளோரியன் விர்ட்ஸ் கிராஸ் செய்ய, அவர் அதனை ஸ்காட்லாந்து அணியின் 3 டிபன்டர்களுக்கு ஊடாக கோல் வலைக்குள் திணித்தார்.
இதன் மூலம் யூரோ கால்பந்து வரலாற்றில் ஜெர்மனிக்காக குறைந்த வயதில் கோல் அடித்த வீரர் என்ற பெருமையை புளோரியன் விர்ட்ஸ் பெற்றார். 19-வது நிமிடத்தில் ஜெர்மனிஅடுத்த கோலை அடித்தது. இல்கே குண்டோகன் பந்தை பாக்ஸ் பகுதிக்குள் நின்ற ஹய் ஹாவர்ட்ஸிடம் தட்டிவிட அவர், அதை ஜமால் முசியாலாவுக்கு திருப்பிவிட்டார். நொடிப்பொழுதில் ஜமால் முசியாலா அதை கோலாக மாற்றினார். இதனால் ஜெர்மனி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
45-வது நிமிடத்தில் பாக்ஸ் பகுதிக்குள் வைத்து ஜெர்மனி அணியின் முன்கள வீரரான இல்கே குண்டோகனை, ஸ்காட்லாந்து அணியின் டிபன்டரான ரியான் போர்டியஸ் விதிமுறைகளுக்கு மாறாக தடுத்தார். இதனால் ரியான்போர்டியஸுக்கு நடுவர் ரெட்கார்டு வழங்கியதுடன் ஜெர்மனிக்கு பெனால்டி வாய்ப்பு கொடுத்தார். இதை பயன்படுத்தி ஹய் ஹாவர்ட்ஸ் கோல்அடிக்க முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் ஜெர்மனி 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
ஸ்காட்லாந்து அணி 10 வீரர்களுடன் விளையாடிய நிலையில் 2-வது பாதியிலும் ஜெர்மனி ஆதிக்கம் செலுத்தியது. 63-வது நிமிடத்தில் ஹய் ஹாவர்ட்ஸுக்கு பதிலாக களமிறங்கிய நிக்லஸ் ஃபுல்க்ரக் அடுத்த 5-வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். இந்த கோலை ஜமால் முசியாலா, இல்கே குண்டோகன் ஆகியோரது உதவியுடன் அடித்திருந்தார் நிக்லஸ் ஃபுல்க்ரக். அவர், அடித்த கோல் காரணமாக ஜெர்மனி 4-0 என்ற வலுவான முன்னிலையை பெற்றது.
87-வது நிமிடத்தில் ஸ்காட்லாந்து வீரர் ராபர்ட்சன் ஃப்ரீ-கிக்கில் பந்தை பாக்ஸ் பகுதிக்குள் அடித்தார். அதை ஜெர்மனி வீரர் நிக்லஸ் ஃபுல்க்ரக் ஃபிளிக் செய்தார். அப்போது உயரமாக வந்த பந்தை ஸ்காட்லாந்து வீரர் மெக்கென்னா தலையால் முட்டினார். அப்போது அதை ஜெர்மனி அணியின் டிபன்டர் ருடிகர் தலையால் முட்டி விலக்கிவிட முயன்றார். ஆனால் அது சுய கோலாக மாறியது.
80-வது நிமிடத்தில் ஜெர்மனி அணியில் டோனி குருஸுக்கு பதிலாக எம்ரே கேன் களமிறக்கப்பட்டார். 90 நிமிடங்கள் முடிவடைந்த நிலையில் காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட 3-வது நிமிடத்தில் எம்ரே கேன் கோல் அடித்து அசத்தினார். முடிவில் ஜெர்மனி அணி5-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் யூரோ கால்பந்து வரலாற்றில் தொடக்க ஆட்டத்தில் அதிக கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல் அணி என்ற சாதனையையும் படைத்துள்ளது ஜெர்மனி அணி.
இதற்கு முன்னர் 2021-ம் ஆண்டு தொடரின் தொடக்க ஆட்டத்தில் இத்தாலி 3-0 என்ற கோல்கணக்கில் துருக்கியை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. இதனை தற்போது ஜெர்மனி முறியடித்துள்ளது. மேலும் பெரிய தொடர்களில் முதல் ஆட்டத்தில் தோல்வியை சந்தித்து வந்த சோகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது ஜெர்மனி அணி. அந்த அணி 2018 மற்றும் 2022உலகக் கோப்பை தொடரிலும் 2021-ம் ஆண்டு யூரோ கோப்பை தொடரிலும் தனது தொடக்க ஆட்டத்தில் தோல்வியை சந்தித்து இருந்தது.
சுவிட்சர்லாந்து வெற்றி: ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து - ஹங்கேரி அணிகள் மோதின. இதில் சுவிட்சர்லாந்து 3-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில்12-வது நிமிடத்தில் க்வாடோ துவாவும், 45-வது நிமிடத்தில் மைக்கேல் எபிசரும், 90-வது நிமிடத்தில் ப்ரீல் எம்போலோவும் தலா ஒரு கோல்அடித்தனர். ஹங்கேரி அணி தரப்பில் 66-வது நிமிடத்தில் பர்னபாஸ் வர்கா கோல் அடித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT