Published : 15 Jun 2024 06:35 AM
Last Updated : 15 Jun 2024 06:35 AM
டிரினிடாட்: ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ‘சி’ பிரிவில் நேற்று டிரினிடாட்டில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - பப்புவா நியூ கினியா மோதின. முதலில் பேட் செய்த பப்புவா நியூ கினியா 19.5 ஓவர்களில் 95 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கிப்லின் டோரிகா 32 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் எடுத்தார். அலெய் நாவோ 13, டோனி யூரா 11 ரன்கள் சேர்த்தனர். ஆப்கானிஸ்தான் அணி சார்பில் இடது கை வேகப்பந்து வீச்சாளரான பசல்ஹக் பரூக்கி 4 ஓவர்களை வீசி 16 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார். நவீன் உல் ஹக் 2 விக்கெட்கள் கைப்பற்றினார்.
பப்புவா நியூ கினியா சேர்த்த 95 ரன்களில் 25 ரன்கள் எக்ஸ்டிராவும் அடங்கும். ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர்கள் வைடு வாயிலாக 13 ரன்களையும், பைஸ் வாயிலாக 12 ரன்களையும் வழங்கினர்.
96 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 15.1 ஓவரில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரஹ்மனுல்லா குர்பாஸ் 11, இப்ராகிம் ஸத்ரன் 0, அஸ்மதுல்லா ஓமர்ஸாய் 13 ரன்களில் ஆட்டமிழந்தனர். குல்பாதின் நயிப் 36 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 49 ரன்களும், முகமது நபி 16 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆப்கானிஸ்தான் அணிக்கு இது ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது.
அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் 125 ரன்கள் வித்தியாசத்தில் உகாண்டாவையும், 2-வது ஆட்டத்தில் 84 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும் வென்றிருந்தது. தற்போதைய வெற்றியின் மூலம் 6 புள்ளிகளுடன் சூப்பர் 8 சுற்றில் கால்பதித்துள்ளது ஆப்கானிஸ்தான் அணி. டி 20 உலகக் கோப்பை வரலாற்றில் ஆப்கானிஸ்தான் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுவது இதுவே முதன்முறையாகும். ஆட்ட நாயகனாக பசல்ஹக் பரூக்கி தேர்வானார்.
சி பிரிவில் இருந்து ஏற்கெனவே இரு முறை சாம்பியனான மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியிருந்தது. ஆப்கானிஸ்தான் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய நிலையில் 2 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்திருந்த இதே பிரிவில் உள்ள நியூஸிலாந்து அணி வெளியேறி உள்ளது. கடந்த முறை 2-வது இடம் பிடித்திருந்து நியூஸிலாந்து அணி இம்முறை லீக் சுற்றுடன் நடையை கட்டுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT