Published : 15 Jun 2024 06:15 AM
Last Updated : 15 Jun 2024 06:15 AM
லாடர்கில்: ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று கனடாவுடன் மோதுகிறது.
ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று இரவு 8 மணிக்கு புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடர்கில் நகரில் ‘ஏ’ பிரிவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா - கனடா அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுக்குமே இதுகடைசி லீக் ஆட்டம்.
இந்திய அணி தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிவிட்டது. அதேவேளையில் கனடா 3 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 2 தோல்விகளுடன் 4 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது.
இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி பார்முக்கு திரும்புவதில் கவனம் செலுத்தக்கூடும். ஐபிஎல் தொடரில் 700 ரன்களை வேட்டையாடிய விராட் கோலி நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் ரன்கள் சேர்க்க தடுமாறி வருகிறார். 3 ஆட்டங்களிலும் அவர், 5 ரன்களே எடுத்துள்ளார். அமெரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். எனினும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான நியூயார்க் நசாவு கண்டி மைதானம் போன்று லாடர்கில் ப்ரோவார்ட் கவுண்டி மைதானம் கிடையாது.
இதனால் விராட் கோலியிடம் இருந்த சிறந்த மட்டை வீச்சு வெளிப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் அரை சதம் விளாசிய சூர்யகுமார் யாதவ், 35 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்த ஷிவம் துபே, முதல் இரு ஆட்டங்களிலும் முறையே 36, 42 ரன்கள் எடுத்த ரிஷப் பந்த் ஆகியோர் மீண்டும் ஒரு முறை சிறந்த பங்களிப்பை வழங்கக்கூடும்.
பந்து வீச்சில் ஜஸ்பிரீத் பும்ரா, ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் சிறந்த பார்மில் உள்ளனர். இன்றைய ஆட்டத்தில் ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட வாய்ப்பு உள்ளது. இது நிகழ்ந்தால் யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் களமிறங்கக்கூடும். இதற்கிடையே இன்றைய ஆட்டம் மழையால் பாதிக்கப்படக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன்னதாக அதிகாலை 5 மணிக்கு கிங்ஸ்டவுனில் ‘டி’ பிரிவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா - நேபாளம் மோதுகின்றன. தென் ஆப்பிரிக்க அணி 3 ஆட்டங்களில் வெற்றி பெற்று ஏற்கெனவே சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது. நேபாளம் 2 ஆட்டங்களில் விளையாடி ஒரு தோல்வி, ஒரு ஆட்டம் முடிவில்லாதது என ஒரே ஒரு புள்ளியுடன் 4-வது இடத்தில் உள்ளது. தொடர்ந்து காலை 6 மணிக்கு டிரினிடாட்டில் ‘சி’ பிரிவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்து - உகாண்டா மோதுகின்றன.
சூப்பர் 8 சுற்றில் இந்தியா மோதும் அணிகள் எவை? - ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதுவரை ‘ஏ’ பிரிவில் இருந்து இந்தியா, ‘பி’ பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா, ‘சி’ பிரிவில் இருந்து ஆப்கானிஸ்தான், மேற்கு இந்தியத் தீவுகள், ‘டி’ பிரிவில் இருந்து தென் ஆப்பிரிக்கா என 5 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி உள்ளன. மீதம் உள்ள 3 அணிகள் எவை என்பது இன்னும் ஒரு சில நாட்களில் தெரிந்துவிடும். லீக் சுற்று 18-ம் தேதி நிறைவடையும் நிலையில் சூப்பர் 8 சுற்று 19-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில், சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி மோதக்கூடிய அணிகளின் விவரம் தெரியவந்துள்ளது. இதன்படி சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 20-ம் தேதி ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது. 2-வது ஆட்டத்தில் லீக் சுற்றில் ‘டி’ பிரிவில் 2-வது இடத்தை பிடிக்கும் அணியை எதிர்கொள்ளும். இந்த ஆட்டம் 22-ம் தேதி நடைபெறுகிறது. தொடர்ந்து கடைசி ஆட்டத்தில் இந்திய அணி 24-ம் தேதி ஆஸ்திரேலியாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT