

இந்தூரில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 152/9 என்ற ரன்களை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி எளிதில் விரட்டி 155/4 என்று வெற்றி பெற்றது. கே.எல்.ராகுல் 84 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் திகழ்ந்தார்.
இந்த வெற்றி மூலம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் 3ம் இடம் வகிக்கிறது. தொடர் தோல்விகளினால் இந்த ஐபிஎல் ஏலத்தில் மிகப்பெரிய தொகைகளுக்கு ஒரு இந்திய, ஒரு இங்கிலாந்து வீரரை ஏலம் எடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அட்டவணையின் அடியில் உள்ளது.
ராயல்ஸ் அணி பட்லரை தொடக்க வீரராக அனுப்பி மீண்டும் அவரை நன்றாகப் பயன்படுத்தியது. ஆனால் டி ஆர்க்கி ஷார்ட், ரஹானே ஆகியோர் சொதப்பலைத் தொடர்ந்தனர், ஷார்ட் முதல் ஓவரிலேயே கொடியேற்றினார். 4வது ஓவரில் ரஹானே கட் ஷாட்டை டாப் எட்ஜ் செய்து ஷார்ட் தேர்ட்மேனில் முடிந்தார்.
35/2 என்ற நிலையில் சாம்சன் (28, 2 நான்குகள் 1 சிக்ஸ்)., பட்லர் இணைந்து 49 ரன்களை 7 ஓவர்களில் சேர்த்தனர். மீண்டும் சாம்சன் தன் ஷார்ட் பிட்ச் பலவீனத்தில் ஆண்ட்ரூ டை-யிடம் வீழ்ந்தார்., 84/3. பென் ஸ்டோக்ஸ் 12 ரன்கள் எடுத்து முஜீப் பந்துக்கு ஒதுங்கிக் கொண்டு ஷாட் அடிக்க முனைந்தார், ஆனால் முஜிப் பந்து அவரைத் தொடர்ந்து சென்றது, அதனை ஸ்டோக்ஸ் லாங் ஆஃபில் தூக்கி அடிக்க மயங்க் அதனைப் பிடிக்கும் முயற்சியில் பவுண்டரியைக் கடந்து விடுவார் போலிருந்தது, ஆனால் அவர் சாதுரியமாக பந்தைத் தூக்கிப் போட மனோஜ் திவாரி பிடித்தார்.மிக அருமையான சமயோசிதம், 100/4.
ஜோஸ் பட்லரை முஜீப் உர் ரஹ்மான், ஆண்ட்ரூ டை ஆகியோர் கட்டிப்போட்டனர். பட்லர் 39 பந்துகளில் 51 எடுத்து முஜீபிடம் வீழ்ந்தார், அதே ஓவரில் ஜோஃப்ரா ஆர்ச்சரை அருமையான பந்தில் பவுல்டு செய்தார் முஜீப். பவர் ப்ளே முடிந்து ராஜஸ்தான் 9 ஓவர்களில் 64 ரன்களையே எடுக்க முடிந்தது. இறுதி ஓவர்களின் போது 110/6 என்று நுழைந்தது ராஜஸ்தான். ஷ்ரேயாஸ் கோபால் 24 ரன்களை எடுக்க ஸ்கோர் 152/9 என்று முடிந்தது. கிங்ஸ் லெவன் தரப்பில் முஜீப் ரஹ்மான் 27 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள், டை 24 ரன்களுக்கு 2 விக்கெட். அஸ்வின் 4 ஓவர்கள் 30 ரன்கள் 1 விக்கெட், இவர் 10 டாட்பால்களை வீசினார், முஜீப் 8 டாட்பால்கள். அக்சர் படேல் ஆகச்சிறப்பாக வீசி 4 ஓவர்களில் 21 ரன்களை விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.
ராகுல் அதிரடியில் வெற்றி:
கிறிஸ் கெய்லுக்கு ஜோஃப்ரா ஆர்ச்சர் தன் வேகத்தினால் சில தொல்லைகளைக் கொடுத்தார். கெய்ல் 2 பவுண்டரிகள் அடித்து 8 ரன்களில் ஆர்ச்சரிடமே வீழ்ந்தார். கருண் நாயர் மிக அருமையாக ஆடி 23 பந்துகளில் 2 பவுண்டரிகள் 2 சிக்சரக்ளுடன் 31 ரன்களெடுத்தார், ஆனால் ராஜஸ்தான் கட்டுக்கோப்புடன் வீசி 13 ஓவர்களில் கெயில், அகர்வால், கருண் நாயர், அக்சர் படேல் ஆகியோரை வீழ்த்தியது. 12.5 ஓவர்களில் 84/4 என்று இருந்த போது ராகுல் மட்டுமே இருந்தார்.
43 பந்துகளில் 48 ரன்கள் என்று நிதானம் காட்டிய ராகுல் 4 ஓவர்களில் 43 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்ற நிலையில் அடிக்கத் தொடங்கினார். அடுத்த 11 பந்துகளில் 5 பவுண்டரிகள் விளாசினார். 44 பந்துகளில் 50 எட்டிய ராகுல் கடைசியில் 54 பந்துகளில் 7 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 84 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக்த் திகழ 8 பந்துகள் மீதம் வைத்து 155/4 என்று வென்றது கிங்ஸ் லெவன். ஸ்டாய்னிஸ் 16 பந்துகளில் 2 நான்குகள், 1 ஆறு என்று 23 நாட் அவுட். ஆட்ட நாயகன் முஜீப் உர் ரஹ்மான்.