Published : 31 May 2018 08:10 PM
Last Updated : 31 May 2018 08:10 PM

இங்கிலாந்தில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்ற 5 டெஸ்ட் போட்டிகள்: ஒரு பார்வை

இங்கிலாந்தில் அன்று நடப்பு டெஸ்ட் தொடரில் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்தை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான் அணியின் முழு ஆதிக்க வெற்றியாகக் கருதப்படுகிறது.

இதற்கு முன்னர் அவர்கள் இங்கிலாந்துக்கு அளித்த 5 அதிர்ச்சித் தோல்விகளைப் பார்ப்போம்:

2016 லார்ட்ஸ் வெற்றி

மிஸ்பா உல் ஹக் தலைமையில் சில டெஸ்ட் வெற்றிகளைப் பெற்ற நிலையில் இங்கிலாந்து வந்தது பாகிஸ்தான் அணி

டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட் செய்யத் தீர்மானித்ததே மிகப்பெரிய பாசிட்டிவ் அணுகுமுறையாக ஒரு கேப்டனாக மிஸ்பா உல் ஹக் 114 ரன்களையும் ஆசாத் ஷபிக் 73 ரன்களையும் எடுக்க 339 என்ற டீசண்ட் ஸ்கோரை எட்டியது பாகிஸ்தான். கிறிஸ் வோக்ஸ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆண்டர்சன் இந்த டெஸ்டில் இல்லை.

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து யாசிர் ஷாவின் 6/81-ல் 272 ரன்களுக்குச் சுருண்டது. குக் மட்டுமே 81 ரன்களை அதிகபட்சமாக எடுத்தார். தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் கிறிஸ் வோக்ஸின் அபாரப் பந்து வீச்சில் (5விக்) 215 ரன்களுக்குச் சுருண்டது. ஆசாத் ஷபிக் மட்டுமே அதிகபட்சமாக 49 ரன்களை எடுத்தார்.

வெற்றி பெற இங்கிலாந்துக்குத் தேவை 283 ரன்கள்தான் ஆனால் மீண்டும் யாசிர் ஷா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஆமிர் 2, ரஹத் அலி 3 என்று கைப்பற்ற 207ரன்களுக்குச் சுருண்டு தோல்வி கண்டது.

1992 லார்ட்ஸ் டெஸ்ட்:

இங்கிலாந்து கேப்டன் கூச் டாஸ் வென்று முதலில் பேட் செய்தார். இவரும் அலெக்ஸ் ஸ்டூவர்டும் போராடி முதல் விக்கெட்டுக்காக 123 ரன்களை கடினமான வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஆகிப் ஜாவேத், முஷ்டாக் அகமதுவுக்கு எதிராக எடுத்தனர். ஆனால் கூச்சை வாசிம் அக்ரம் பவுல்டு செய்ய ஹிக்கை மலிவாக வக்கார் யூனிஸ் வீழ்த்த 153/1 என்ற நிலையிலிருந்து 255 ரன்களுக்கு மகாசரிவு கண்டது இங்கிலாந்து, வக்கார் யூனிஸ் 5 விக்கெட்டுகளைச் சாய்த்து சரிவுக்குக் காரணமானார்.

தொடர்ந்து ஆடிய பாகிஸ்தானும் டெவன் மால்கம், டீப்ரெய்டாஸ் பந்து வீச்சில் 293 ரன்களையே எடுத்து 38 ரன்கள் முன்னிலை பெற்றது. ஆனால் இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து மீண்டும் வாசிம் அக்ரமின் 4 விக்கெடுகள், வக்கார் யூனிஸின் 3 விக்கெட், முஷ்டாக் அகமதுவின் 3 விக்கெட்டுகளால் 175 ரன்களைத்தான் எட்டியது.

பாகிஸ்தான் 138 ரன்கள் வெற்றி இலக்கை 4வது இன்னிங்சில் விரட்டும் போது ஆட்டம் பரபரப்பான முடிவை நோக்கிச் சென்றது ரமீஸ் ராஜா, அசிப் முஜ்தபா, ஜாவேத் மியாண்டட் ஆகியோர் டக் அவுட் ஆக, சலீம் மாலிக், இன்சமாம் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ஒரு முனையில் 39 ரன்களுக்குப் போராடிய ஆமிர் சொஹைலும் வெளியேற பாகிஸ்தான் 95/8 என்று இங்கிலாந்தின் பக்கம் வெற்றி இருந்தது, ஆனால் வாசிம் அக்ரம் இறங்கி 64 பந்துகளில் 45 ரன்களை எடுக்க, அவருக்கு உறுதுணையாக வக்கார் யூனிஸ் 20 ரன்களை எடுக்க 141/8 என்று பாகிஸ்தான் மறக்க முடியாத அந்த வெற்றியைப் பெற்றது. இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் லூயிஸ், லெக்ஸ்பின்னர் சாலிஸ்பரி தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஆனால் நெருக்கமாக வந்து இங்கிலாந்து அதிர்ச்சித் தோல்வி தழுவியது. காரணம் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸின் மன உறுதி.

1992 ஓவல் டெஸ்ட்:

இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஜாவேத் மியாண்டட், இங்கிலாந்து கேப்டன் கிரகாம் கூச்.

இங்கிலாந்து பேட்டிங்கைத் தேர்வு செய்து 207 ரன்களுக்குச் சுருண்டது, வாசிம் அக்ரமை சுத்தமாக ஆடமுடியவில்லை. மைக் ஆர்தர்டன் மட்டுமே 60 ரன்களை எடுத்தார். அக்ரம் 67 ரன்களுக்கு 6 விக்கெட். தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணியில் ஷோயப், ஜாவேத், அசிப் முஜ்தபா, ரஷீத் லடீஃப் அரைசதங்களை போராடி எடுக்க சலீம் மாலி 40 எடுத்தார். பாகிஸ்தான் 380 ரன்களை எடுத்து 173 ரன்கள் முன்னிலை பெற்றது. இங்கிலாந்தில் டெவன் மால்கம் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

2வது இன்னிங்ஸிலும் இங்கிலாந்து வக்கார் யூனிஸ் (5/52), வாசிம் அக்ரம் (3/36) இங்கிலாந்தை சீர் குலைக்க ராபின் ஸ்மித் 84 ரன்களை எடுத்திருக்காவிட்டால் 174 ரன்கள் எடுப்பது கடினமாக அமைந்திருக்கும். ராபின் ஸ்மித் பேட்டிங்கினால் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது இங்கிலாந்து, பாக் 4 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

1987 ஹெடிங்லே: பாக். இன்னிங்ஸ் வெற்றி

பாகிஸ்தான் கேப்டன் இம்ரான் கான், இங்கிலாந்து கேப்டன் மைக் கேட்டிங். முதலில் பேட் செய்த இங்கிலாந்து இம்ரான், வாசிம் அக்ரம், மொசின் கமால் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற 136 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

 

தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 86/4 என்ற நிலையிலிருந்து சலீம் மாலிக் (99), இஜாஜ் அகமட் (50), வாசிம் அக்ரம் (43) ஆகியோரது பேட்டிங்கினால் 353 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்தின் அப்போதைய மெக்ராவான நீல் ஃபாஸ்டர் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 2வது இன்னிங்ஸில் இம்ரான் கான் தன் வாழ்நாளின் சிறந்த பவுலிங்கை வீசியதில் 40 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளைக் கைப்பற்ற இங்கிலாந்து 199 ரன்களுக்குச் சுருண்டது, பாகிஸ்தான் இன்னிங்ஸ் மற்றும் 18 ரன்களில் வெற்றி.

1982 லார்ட்ஸ் வெற்றி:

இதற்கு முன்பாக 28 ஆண்டுகளாக இங்கிலாந்தில் டெஸ்ட் வெற்றி கண்டிராத பாகிஸ்தான் இம்ரான் தலைமையில் லார்ட்ஸில் களமிறங்கியது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணியில் ‘ஹேண்ட்சம் ஓபனர்’ மோசின் கான் 200 ரன்களை எடுத்தார். ஜாகீர் அப்பாஸ் 75 ரன்களை எடுத்தார். 428/8 என்று பாக். டிக்ளேர் செய்தது. இயன் போத்தம் 148 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் ராபின் ஜேக்மன் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 27 ரன்களுக்குச் சுருண்டது, இம்ரான் 2 விக்கெட்டுகளையும் சர்பராஸ் அகமட் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்ற அப்துல் காதிர் 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

இங்கிலாந்துக்கு பாலோ ஆன் கொடுத்தார் இம்ரான். இதில் கிறிஸ் டாவரே 89, போத்தம் 69 எடுக்க 276 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது இங்கிலாந்து. முடாசர் நாசர் 32 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.76 ரன்கள் வெற்றி இலக்கை பாகிஸ்தான் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எடுத்து அபார வெற்றி பெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x