

டிரினிடாட்: நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘குரூப் - சி’ ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை 13 ரன்களில் வென்றுள்ளது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. இது நியூஸிலாந்து அணிக்கு முதல் சுற்று ஆட்டத்தில் இரண்டாவது தோல்வியாக அமைந்துள்ளது.
இந்தப் போட்டி மேற்கு இந்தியத் தீவுகளின் டிரினிடாட் பகுதியில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்து வீசியது. முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது.
39 பந்துகளில் 68 ரன்கள் விளாசினார் மேற்கு இந்தியத் தீவுகளின் ரூதர்ஃபோர்ட். நியூஸிலாந்து சார்பில் போல்ட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சவுதி மற்றும் பெர்குசன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நியூஸிலாந்து விரட்டியது.
கான்வே மற்றும் ஃபின் ஆலன் இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். கான்வே, 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் தந்தார். ஆலன், 26 ரன்கள் எடுத்து வெளியேறினார். கேப்டன் கேன் வில்லியம்சன், 1 ரன்னில் வெளியேறினார். ரச்சின் ரவீந்திரா, மிட்செல் மற்றும் ஜேம்ஸ் நீஷம் ஆகியோரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினார்.
கிளென் பிலிப்ஸ், 33 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆறுதல் தந்தார். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 13 ரன்களில் வெற்றி பெற்றது. குரூப் சுற்றில் அந்த அணிக்கு இது மூன்றாவது வெற்றி. சூப்பர் 8 வாய்ப்பை அந்த அணி உறுதி செய்துள்ளது. அதே நேரத்தில் இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் தோல்வியை தழுவியுள்ளது நியூஸிலாந்து.
முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான், இரண்டாவது போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியிடம் நியூஸிலாந்து தோல்வி அடைந்துள்ளது. இதன் காரணமாக அந்த அணி முதல் சுற்றோடு தொடரில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.