Published : 03 May 2018 07:31 AM
Last Updated : 03 May 2018 07:31 AM

ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதல்: பதிலடி கொடுக்குமா தினேஷ் கார்த்திக் படை ?

ஐபிஎல் தொடரில் இன்று இரவு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதல் அணிகள் மோதுகின்றன.

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 ஆட்டங்களில் 6 வெற்றிகளை குவித்து 12 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. அதேவேளையில் தினேஷ் கார்த்திக் தலைமயிலான கொல்கத்தா அணி 8 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 4 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடம் வகிக்கிறது. இரு அணிகளுமே தங்களது கடந்த ஆட்டத்தில் மன உறுதியை அதிகரிக்கும் அளவிலான வெற்றியை வசப்படுத்தின. கொல்கத்தா அணி, பெங்களளூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 176 ரன்களை வெற்றிகரமாக துரத்தியது.

அதேவேளையில் தனது சொந்த மைதானத்தை புனேவுக்கு மாற்றிக் கொண்டுள்ள சென்னை அணி, டெல்லி டேர்டெவில்ஸ் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது. அந்த ஆட்டத்தில் ஷேன் வாட்சன், தோனி, அம்பாட்டி ராயுடு ஆகியோரது அதிரடியால் சென்னை அணி 211 ரன்களை குவித்தது.

பெரிய இலக்கை கொடுத்த போதிலும் கடைசி கட்டத்தில் டெல்லி வீரர்களான ரிஷப் பந்த், விஜய் சங்கர் நெருக்கடி கொடுத்தனர். எனினும் இளம் வேகப்பந்து வீச்சாளர்களான லுங்கி நிகிடி, கே.எம்.ஆசிப் ஆகியோரது சிறப்பான பங்களிப்பால் சென்னை அணி 6-வது வெற்றியை வசப்படுத்தியது.

சென்னை அணியின் வெற்றிகளில் தோனி முக்கிய காரணியாக இருந்து வருகிறார். ஆக்ரோஷ பேட்டிங் வழிமுறைக்கு திரும்பி உள்ள அவர், கேப்டனாக எப்போதும் அணிக்கு எழுச்சி ஊட்டுபவராக திகழ்கிறார். டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் அணியில் 4 மாற்றங்களை மேற்கொண்டிருந்தார் தோனி. இது அவர், தனது அணியின் ஆழமான திறன் மீது கொண்டிருந்த வலுவான நம்பிக்கையை வெளிப்படுத்தியது. சிறப்பாக செயல்பட்டு வந்த தீபக் ஷகார் காயம் காரணமாக விளையாட முடியாத சூழ்நிலையில் தென் ஆப்பிரிக்காவின் லுங்கி நிகிடி பவர்பிளே மற்றும் இறுதி கட்ட ஓவர்களில் நம்பிக்கை அளித்தார்.

அதேபோன்று தனது அறிமுக போட்டியிலேயே 2 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார் ஆசிப். கேரளாவைச் சேர்ந்த அவர் 3 ஓவர்களில் 43 ரன்களை தாரை வார்த்த போதிலும் பந்து வீச்சின்போது கையை அதிவிரைவாக பயன்படுத்தும் நடவடிக்கையானது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பேட்டிங்கில் கடந்த சீசனில் பெங்களூரு அணியில் தடுமாறிய ஷேன் வாட்சன், தற்போது சென்னை அணியில் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் ஆல்ரவுண்டராக உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தி வருகிறார். தலா ஒரு சதம், அரை சதம் அடித்துள்ள அவர் இதுவரை இந்த சீசனில் 281 ரன்கள் குவித்துள்ளார்.

இதேபால் அம்பாட்டி ராயுடும் தனது பணியை அமர்க்களமே இல்லாமல் அற்புதமாக செய்து வருகிறார். போட்டிங்கில் எந்த வரிசையில் களமிறங்கினாலும் சரி ளமிறங்கினாலும் எதிரணிக்கு சவால் கொடுக்கும் அவர், இந்த சீசனில் 2 அரை சதங்களுடன் 370 ரன்கள் குவித்து அதிக ரன்கள் அடித்தவர்களின் பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். அவரிடம் இருந்து மீண்டும் ஒரு சிறப்பான இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும். வழக்கத்துக்கு மாறாக தொடக்கத்திலேயே ஆக்ரோஷமாக விளையாடும் தோனியின் அபரிமிதமான பார்ம் அணிக்கு கூடுதல் வலு சேர்த்துள்ளது. இந்த சீசனில் 3 அரை சதங்கள் அடித்துள் அவரது ஸ்டிரைக் ரேட் 169.23 ஆக உள்ளது. 8 ஆட்டங்களில் தோனி 286 ரன்கள் விளாசி உள்ளார்.

பெங்களூரு அணிக்கு எதிராக 206 ரன்கள் இலக்கை துரத்திய போது தோனி 34 பந்துகளில் 70 ரன்கள் விளாசியது இன்னும் அனைவராலும் மறக்க முடியாத இன்னிங்ஸாக உள்ளது. அதிலும் வெற்றிக்கான ரன்னை அவர், லாங் ஆன் திசையில் சிக்ஸராக மாற்றியது 2011-ம் ஆண்டு உலக்கோப்பை இறுதி ஆட்டத்தின் தருணத்தை மீண்டும் ஒரு முறை கண்முன் கொண்டு வந்தது போன்று இருந்தது. தோனியின் அதீத பார்ம் கொல்கத்தா பந்து வீச்சாளர்களுக்கு சவாலாக இருக்கக்கூடும்.

பட்டியலில் நடுவில் இருக்கும் இருமுறை சாம்பியனான கொல்கத்தா அணிக்கு இன்னும் 6 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. இதில் 3 ஆட்டங்களை சொந்த மைதானமான ஈடன்கார்டனில் விளையாடுகிறது. உள்ளூர் மைதான சாதகங்களுடன் இந்த ஆட்டங்களில் வெற்றி கண்டு முதன்முறையாக தனது தலைமையில் பிளே ஆஃப் சுற்றுக்கு அணியை முன்னேற்றம் காணச் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் தினேஷ் கார்த்திக் தீவிரம் காட்டக்கூடும். இந்த சீசனில் அந்த அணி வெளிநாட்டு வீரர்களான கிறிஸ் லின், சுனில் நரேன், ஆந்த்ரே ரஸல் ஆகியோரை பெரிதும் சார்ந்துள்ளது.

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் கிறிஸ் லின் 62 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்திருந்தார். மீண்டும் பார்முக்கு திரும்பி உள்ள அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். அதிரடியாக விளையாடும் ராபின் உத்தப்பா நிலைத்து நின்று விளையாடும் திறனை கொண்டிருக்காமல் இருப்பது பலவீனமாக உள்ளது. இந்த சீசனில் 8 ஆட்டங்களில் அவர், 199 ரன்கள் சேர்த்துள்ள போதிலும் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. இளம் வீரரான சுப்மான் கில்லையும் கொல்கத்தா அணி இதுவரை சரிவர பயன்படுத்திக் கொள்ளவில்லை.

யு-19 உலகக் கோப்பையில் நட்சத்திர வீரராக திகழ்ந்த அவர், பேட்டிங் வரிசையில் 7-வது வீரராக களமிறக்கப்படுகிறார். இந்த சீசனில் அவர் 5 ஆட்டங்களில் முறையே 3, 6, 14, 37, 5 ரன்கள் சேர்த்துள்ளார். பேட்டிங் வரிசையில் முன்னதாக களமிறக்கப்படும் பட்சத்தில் சுப்மான் கில் தனது மேம்பட்ட திறனை வெளிப்படுத்தக்கூடும். இதனால் அவரது திறனை முழுமையாக பயன்படுத்திக் கொள்வது குறித்து கொல்கத்தா அணி நிர்வாகம் ஆலோசிக்கக்கூடும்.

இந்த சீசனில் சென்னை - கொல்கத்தா அணிகள் 2-வது முறையாக மோதுகின்றன.

கடந்த மாதம் 10-ம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணி ஒரு பந்து மீதம் இருக்க கொல்கத்தா அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. 203 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணி ஷேம் பில்லிங்ஸின் அதிரடியால் வாகை சூடியிருந்தது. அந்த ஆட்டத்தில் பில்லிங்ஸ் 23 பந்துகளில் 56 ரன்கள் விளாசி முக்கிய பங்களிப்பு செய்திருந்தார். இந்த தோல்விக்கு இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணி பதிலடி கொடுக்க முயற்சிக்கக்கூடும். எனினும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கே வெற்றிவாய்ப்பு அதிகமாக உள்ளது. இதுவரை இரு அணிகளும் 19 முறை மோதியுள்ளன. இதில் 12 முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x