

நியூயார்க்: நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘குரூப் - ஏ’ பிரிவில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகளை இழந்த கனடா அணி 106 ரன்களை சேர்த்துள்ளது.
இந்தப் போட்டி நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுன்டி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த கனடா அணியின் தொடக்க வீரர்களாக ஆரோன் ஜான்சன் - நவ்னீத் தலிவால் களமிறங்கினர். இதில் நவ்னீத் 4 ரன்களில் போல்டானார்.
அடுத்து வந்த பர்கட் சிங் 2 ரன்களிலும், நிக்கோலஸ் கிர்டன் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட்டாகினர். 10ஆவது ஓவரில் ஷ்ரேயாஸ் மொவ்வா 2 ரன்களிலும், ரவீந்தர்பால் சிங் டக் அவுட்டாக ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது கனடா.
நிலைத்து ஆடி அரைசதம் கடந்த ஆரோன் ஜான்சன் 52 ரன்னில் போல்டானார். சாத் பின் ஜாபர் 10 ரன்களில் விக்கெட்டாக 18 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்த கனடா 91 ரன்களைச் சேர்த்தது. கலீம் சனா 13 ரன்களிலும், தில்லன் ஹெய்லிகர் 9 ரன்களிலும் களத்தில் இருக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த கனடா 106 ரன்களை சேர்த்தது.
பாகிஸ்தான் அணி தரப்பில் முஹம்மது அமீர், ஹரீஷ் ராவூஃப், ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், நசீம் ஷா, ஷாயின் அப்ரீடி ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.