அதிக அளவிலான டாட் பந்துகளால் தோல்வி: பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அஸம் கருத்து | T20 WC

அதிக அளவிலான டாட் பந்துகளால் தோல்வி: பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அஸம் கருத்து | T20 WC

Published on

நியூயார்க்: ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்ததற்கு அதிக அளவிலான பந்துகளில் ரன்கள் (டாட் பால்கள்) சேர்க்காமல் விட்டதே காரணம் என பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அஸம் தெரிவித்துள்ளார்.

ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நேற்று முன்தினம் நியூயார்க் நகரில் உள்ள நசாவு கவுண்டிகிரிக்கெட் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 6 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 120 ரன்கள் இலக்கைதுரத்திய பாகிஸ்தான் அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 113 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. சவாலான ஆடுகளத்தில் எளிதான இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் அதிக அளவிலான பந்துகளை வீணடித்ததும் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அந்த அணி 59 பந்துகளை ரன் சேர்க்காமல் வீணடித்தது.

இந்திய பந்து வீச்சாளர்களில் ஜஸ்பிரீத் பும்ரா 15 டாட் பந்துகளை வீசினார். இவருக்கு அடுத்தபடியாக அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 11 டாட் பால்கள் வீசினர். அக்சர் படேல் 6, ஜடேஜா 4 டாட் பந்துகளையும் வீசினர். கணக்கீட்டு அளவில் சுமார் 10 ஓவர்களை பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் வீணடித்தது அந்த அந்த அணிக்கு பாதகமாக முடிந்தது. அதிலும் இறுதிக்கட்ட ஓவர்களில் இமாத் வாசிம் 23 பந்துகளை எதிர்கொண்டு 15 ரன்களே சேர்த்தது கடும் விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது.

பாகிஸ்தான் அணிக்கு இது 2-வதுதோல்வியாக அமைந்தது. அந்த அணிதனது முதல் ஆட்டத்தில் அமெரிக்காவிடம் சூப்பர் ஓவரில் தோல்வி கண்டிருந்தது. அடுத்தடுத்த இரு தோல்விகளால் பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. தற்போது பாகிஸ்தான் அணியின் நிகர ரன் ரேட் -0.150 ஆக இருக்கிறது. அந்த அணி தனது 3-வது லீக் ஆட்டத்தில் இதே மைதானத்தில் கனடாவுடன் இன்று மோதுகிறது. தொடர்ந்து தனது கடைசி லீக் ஆட்டத்தில் வரும் 16-ம் தேதி அயர்லாந்துடன் விளையாடுகிறது. இந்த இரு ஆட்டங்களிலும் கணிசமான அளவிலான ரன் ரேட்டுடன் வெற்றி பெற்றாலும் ‘ஏ’ பிரிவில் உள்ள மற்ற அணிகளின் முடிவை பொறுத்தே பாகிஸ்தான் அணியின் சூப்பர் 8 சுற்று வாய்ப்பு தெரியவரும்.

இந்திய அணிக்கு எதிரான தோல்விக்குப் பின்னர் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அஸம் கூறியதாவது: நாங்கள் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டோம். பேட்டிங்கில் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தோம். மேலும் அதிக அளவிலான டாட் பந்துகளை விளையாடினோம். மீண்டும் ஒரு முறை பேட்டிங்கில் முதல் 6 ஓவர்களில் சிறப்பாக செயல்பட தவறினோம். இலக்கை துரத்தும் போது எங்களது திட்டம் சாதாரணமாக விளையாட வேண்டும் என்பதாகவே இருந்தது.

தவறுகளை விவாதிப்போம்: ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்து கொண்டு அவ்வவ்போது பவுண்டரி அடிக்க வேண்டும் என்றே திட்டமிட்டோம். ஆனால் இந்த கட்டத்தில் அதிக அளவிலான டாட் பந்துகளை விளையாடிவிட்டோம். பின்வரிசை பேட்ஸ்மேன்களிடம் அதிகம் எதிர்பார்க்க முடியாது. ஆடுகளம் கண்ணியமாகவே இருந்தது. பந்துகள் மட்டைக்கு நன்றாக வந்தன. ஆனால் கொஞ்சம் மெதுவாகவும், சில பந்துகளில் கூடுதல் பவுன்ஸும் இருந்தது. எஞ்சிய இரு ஆட்டங்களிலும் நாங்கள் வெற்றி பெற வேண்டும். எங்களது தவறுகளை உட்கார்ந்து விவாதிப்போம்.

இவ்வாறு பாபர் அஸம் கூறினார். - பிடிஐ

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in