Published : 11 Jun 2024 08:48 AM
Last Updated : 11 Jun 2024 08:48 AM
நியூயார்க்: ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா முக்கிய பங்கு வகித்தார். முக்கியமான கட்டங்களில் பாபர் அஸம் (13), முகமது ரிஸ்வான் (31), இப்திகார் அகமது(5) ஆகியோரை பும்ரா ஆட்டமிழக்கச் செய்து பாகிஸ்தான் அணியின் வெற்றியை பறித்தார். ஆட்ட நாயகன் விருது வென்ற பும்ரா கூறியதாவது:
இப்போது பாராட்டுபவர்கள் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக நான் காயம் அடைந்திருந்த போதுஇனிமேல் நான் விளையாடமாட்டேன் எனக் கூறினார்கள். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாகவும் சொன்னார்கள். ஆனால் தற்போதுகேள்விகள் மாறி உள்ளன. என்னை பொறுத்தவரையில் நான் அவற்றை கண்டுகொள்ளவில்லை. எனது திறமைக்கு ஏற்றவாறு பந்துவீசுகிறேன். எனக்கு முன்பாக உள்ள பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சி செய்கிறேன்.
நசாவு கவுண்டி போன்ற மைதானங்களில் எப்படிசெயல்பட வேண்டும், பேட்ஸ்மேன்களை ஷாட்கள்மேற்கொள்வதை எப்படி கடினமாக்க முடியும், எனக்கான வாய்ப்புகள் என்ன இருக்கின்றன, என்பதிலேயே கவனம் செலுத்துகிறேன். வெளியே இருந்து வரும் சத்தங்களை (விமர்சனங்கள்) நான் பார்த்தால் அழுத்தமும், உணர்ச்சிகளும் மேலோங்கிவிடும். அதன் பின்னர் நாம் நினைத்தபடி செயல்பட முடியாது.
நான் சிறுவயதில் இருந்தே பந்துவீச்சின் ரசிகன். மட்டைக்கும் பந்துக்கும் இடையில் ஒரு சவால் இருக்கும்போது, அந்த விளையாட்டு எனக்கு பிடிக்கும். நடந்து முடிந்த ஐபிஎல் தொடர் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமானதாக இல்லை. அதே மூட்டை முடிச்சுகளுடன் நாங்கள் இங்கே வராததில் மகிழ்ச்சி அடைகிறோம். இங்கு ஆடுகளம் பந்து வீச்சுக்கு உதவும் போது அதை பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்கிறோம். நான் எனது இளம் வயதில் நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளேன். மட்டைக்கும் பந்துக்கும் இடையே சவால் நன்றாக இருக்கும்போது போட்டி சுவாரஸ்யமாக இருக்கும்.
பந்து வீச்சை தொடங்கும்போது, எங்களுக்கு வழங்கப்பட்ட செய்தி என்னவென்றால், பேட்டிங்கில் என்ன செய்தோமோ அது முடிந்துவிட்டது, அடுத்தது என்ன? நம் கட்டுப்பாட்டில் இருக்கும் விஷயங்கள் என்னென்ன? என்பதை அறிந்து அதில் கவனம் செலுத்த முயற்சிப்போம், ஒன்றிரண்டு பவுண்டரிகள் அங்கும், இங்கும் அடிக்கப்படலாம், அதனால் பதற்றம் அடைய வேண்டாம் என்பதாகவே இருந்தது.
பேட்ஸ்மேன்கள் நல்ல ஷாட்களை விளையாடினாலும் நிதானமாக இருக்க முயற்சி செய்தோம். இதனால் எந்த ஒரு கட்டத்திலும் அணிக்குள் பீதி பரவவில்லை. அதைவிட்டு விலகியே இருந்தோம். குறைந்தஅளவிலான இலக்கை பாதுகாக்கும் போது வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டால் எதிரணியினர் ரன்கள் சேர்ப்பது எளிதாகிவிடும். இதில் நாங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியிருந்தது.
இவ்வாறு ஜஸ்பிரீத் பும்ரா கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT