Published : 11 Jun 2024 08:44 AM
Last Updated : 11 Jun 2024 08:44 AM
நியூயார்க்: வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்புரீத் பும்ரா ஒரு மேதை எனவும் அவர் தனது உயர்மட்ட செயல்திறனை டி20 உலகக் கோப்பை முழுவதும் தொடரச் செய்ய வேண்டும் எனவும் விரும்புவதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார்.
ஐசிசி டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்றுமுன்தினம் நியூயார்க்கில் ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. பேட்டிங்குக்கு கடும் சவாலாக திகழ்ந்து வரும் நசாவு கவுண்டி மைதானத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 19 ஓவர்களில் 119 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக ரிஷப் பந்த் 31 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் சேர்த்தார்.
அக்சர் படேல் 20, ரோஹித் சர்மா 13 ரன்கள் சேர்த்தனர். மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் இரட்டை இலக்கரன்னை எட்டவில்லை. ஒரு கட்டத்தில் இந்திய அணி 13 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 94 ரன்கள் சேர்த்து வலுவாகவே இருந்தது. ஆனால் அடுத்த 6 ஓவர்களில் மேற்கொண்டு 25 ரன்களைசேர்ப்பதற்குள் கொத்தாக விக்கெட்களை தாரைவார்த்தது. பாகிஸ்தான் அணிதரப்பில் நசீம் ஷா, ஹரிஸ் ரவூப் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், முகமது அமிர் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
120 ரன்கள் இலக்குடன் பேட் செய்த பாகிஸ்தான் அணி 14 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 80 ரன்கள் சேர்த்து வெற்றி பெறும் சூழ்நிலையில் இருந்தது. கேப்டன் பாபர் அஸம் 13, உஸ்மான் 13, பஹர் ஸமான் 13 ரன்களில் ஆட்டமிழந்திருந்தனர். முகமது ரிஸ்வான், இமாத் வாசிம் களத்தில் இருந்தனர். அப்போது 15-வது ஓவரை வீசிய ஜஸ்பிரீத் பும்ரா சற்று தாழ்வான ஸ்விங்கால் ரிஸ்வானை போல்டாக்கினார். இது பெரிய திருப்புமுனையாக அமைந்தது. ரிஸ்வான 44 பந்துகளில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 31 ரன்கள் சேர்த்திருந்தார்.
இதன் பின்னர் பாகிஸ்தான் அணி ஆட்டம் கண்டது. ஷதப் கான் 4, இப்திகார் அகமது 5 ரன்களில் நடையை கட்டினர். அர்ஷ்தீப் சிங் வீசிய கடைசி ஓவரில் பாகிஸ்தான்அணியின் வெற்றிக்கு 18 ரன்கள் தேவையாக இருந்தன. முதல் பந்தில் இமாத் வாசிம், ரிஷப் பந்த்திடம் பிடிகொடுத்து வெளியேறினார். 23 பந்துகளை சந்தித்த இமாத் வாசிம் 15 ரன்கள் சேர்த்தார். அடுத்த இரு பந்துகளில் 2 ரன்கள் சேர்க்கப்பட நசீம் ஷா தொடர்ச்சியாக இரு பவுண்டரிகள் அடித்தார். எனினும் அது வெற்றிக்கு போதுமானதாக இல்லை.
முடிவில் 20 ஓவர்களில் பாகிஸ்தான் அணி113 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா 4 ஓவர்களை வீசி 14 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார். அவர், 15 பந்துகளை டாட் பால்களாக வீசி பாகிஸ்தான் அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்களையும் அர்ஷ்தீப் சிங், அக்சர்படேல்ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இந்திய அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியிருந்தது.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான வெற்றிக்குப் பின்னர் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது: ஜஸ்புரீத் பும்ரா தனது பலத்தை கொண்டுசெயல்படுகிறார். அவரால் என்ன செய்ய முடியும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதனால் அவரை பற்றி அதிகம்பேசவிரும்பவில்லை. இந்த உலகக் கோப்பை தொடர் முழுவதும் அவர், இதே மனநிலையுடன் இருக்க விரும்புகிறேன். அவர், ஒரு மேதை, இதை நாம் அனைவரும் அறிவோம்.
இதுபோன்ற ஒரு பந்து வீச்சு வரிசையால் நம்பிக்கையுடன் செயல்பட முடியும். பாகிஸ்தான் அணி பேட்டிங்கின் போது பாதியிலேயே, நாங்கள் அனைவரையும் ஒன்றிணைத்து ஆலோசித்தோம். அப்போது பேட்டிங்கில் நமக்கு நிகழ்ந்தது அவர்களுக்கும் நிகழும் என்று கூறினேன். நாங்கள் பேட்டிங்கில் போதுமான அளவு சிறப்பாக செயல்படவில்லை.
எங்களுடைய இன்னிங்ஸின் பாதியில் நல்ல நிலையில் இருந்தோம். ஆனால் அதன் பிறகு போதிய பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை. இதனால் ரன்கள் குறைவாகவே சேர்த்தோம். இவ்வாறு ரோஹித் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT