Published : 10 Jun 2024 11:16 AM
Last Updated : 10 Jun 2024 11:16 AM

நியூயார்க் ஆடுகளத்தில் என்னதான் பிரச்சினை? - ஐசிசி செய்த தவறு!

நியூயார்க் மைதானம்

அமெரிக்காவில் கிரிக்கெட்டைப் பிரபலப்படுத்தினால் நிதியளவில் ஐசிசி பலமடையும் என்ற கணக்கில் டி20 உலகக் கோப்பையின் முக்கியமான போட்டிகள் சிலவற்றை அமெரிக்காவில் நடத்த ஐசிசி எடுத்த முடிவினால் டி20 கிரிக்கெட்டுக்கு சற்றும் தொடர்பற்ற பிட்ச்களில் போய் முடிந்துள்ளது.

ஐந்து மாதங்களில் உலகக் கோப்பை போட்டிகளை நடத்த ஏதுவான மைதானத்தையும், பிட்சையும் உருவாக்க முடியுமா? ஐசிசி திட்டமிடலில் ஏகப்பட்ட தவறுகள் மலிந்துள்ளன. குறிப்பாக நியூயார்க்கின் நசாவ் கவுன்டி கிரிக்கெட் மைதான பிட்சில் முதல் 2 போட்டிகளில் எந்த அணியும் 100 ரன்களை எடுக்க முடியவில்லை.

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டியும் அத்தகைய போட்டியாகவே ஆகியிருக்கும். என்ன இதில் 20 ரன்கள் கூடுதலாக எடுக்க முடிந்தது அவ்வளவே.

ட்ராப் - இன் பிட்ச்கள் பிரச்சினை: அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் சிலவற்றை நடத்த 2021-ம் ஆண்டு முதலே பரிசீலித்த ஐசிசி, 2023-ம் ஆண்டுதான் இந்த நசாவ் கவுன்டி மைதானத்தைக் கண்டுப்பிடித்தனர் என தெரிகிறது. உடனே பிட்ச்களை அங்கேயே தயாரிப்பது எளிதான காரணம் அல்ல. அதற்குத் தீர்வாகத்தான் ட்ராப் - இன் பிட்ச்களை தயாரித்து கொண்டு வர முடிவு செய்தது.

அதன்படி 10 ட்ராப் - இன் பிட்ச்களை வெளியே தயாரித்து மைதானத்தில் கொண்டு வந்து பதித்துள்ளது. இதில் 4 போட்டிகளுக்கான பிட்ச்கள் 6 பயிற்சிக்கான பிட்ச்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அடிலெய்டில் இதற்கு பெயர் பெற்ற கியூரேட்டரால் தயாரிக்கப்பட்ட பிட்ச் என்றாலும் அது நிலையாக விளையாடுவதற்குரிய பிட்ச் ஆக மாற சில காலம் பிடிக்கும். அடிலெய்டில் தயாரிக்கப்பட்ட பிட்ச்கள் டிசம்பர் 2023-ல் தான் புளோரிடாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. புளோரிடாவில் அப்போது வெயில் என்பதால் அங்கு கொண்டு செல்ல முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கில் டிசம்பர் முதல் மார்ச் வரை பனிப்பொழிவுக் காலம்.

ட்ராப் - இன் பிட்ச்களில் முக்கியப் போட்டியை நடத்துவதற்கு முன்பாக நிறைய பயிற்சி ஆட்டங்களை நடத்தி சோதிக்க வேண்டும். ஆனால், ஐசிசி 106 நாட்களிலேயே போட்டிகளுக்கு பிட்ச் தயார் என்பது போல் செயல்பட்டது. இந்தியா - வந்தகதேச அணிகளுக்கு இடையிலான பயிற்சி போட்டி நடந்த போதுதான் பிட்ச்சின் தன்மை புரிய வந்தது. இந்த லட்சணத்தில் அமெரிக்காவில் நடத்தத் திட்டமிட்ட 16 உலகக் கோப்பை டி20 போட்டிகளில் 8 போட்டிகள் இந்த நியூயார்க் மைதானத்தில் நடத்த திட்டமிட்டது பெரிய தவறாகும்.

இந்த ட்ராப் - இன் பிட்சைத் தயாரித்த டேமியன் ஹாஃப் கூறும்போது, இறுக்கமான மண்ணில் தயாரித்ததால் வேகமும் பவுன்சும் இருக்கும். இந்த பிட்ச்களில் அமெரிக்காவின் பிளாக் ஸ்டிக் என்ற மண் பயன்படுத்தப்பட்டுள்ளது. 60 சதவீதம் இதில் களிமண் உள்ளது. அடிலெய்ட் பிட்சும் இப்படிப்பட்டதுதான். ஒருமுறை மைதானத்தில் பிட்ச்சைப் பதித்து விட்டால் அதன் பிறகு ரோலர் உருட்டுவது, தண்ணீர் பாய்ச்சுவது போன்றவையெல்லாம் இயல்பான நடப்புகள்தான்.

ஆனால், ஐசிசி செய்த மாபெரும் தவறு என்னவெனில் ஜூன் 3-ம் தேதி முதல் 12-ம் தேதி வரையிலான 10 நாட்களுக்குள் இத்தனை போட்டிகளை இதில் நடத்துவது என்பதுதான். பிட்ச்சில் இருக்கும் பிளவுகளில் முளைத்த புற்கள்தான் பிட்ச்சில் பவுன்ஸ் சமச்சீராக இல்லாததற்கு பெரிய காரணம் என டேமியன் ஹாஃப் விவரிக்கிறார். இதோடு ஈரப்பதம், மேக மூட்டமான வானிலை எல்லாம் சேர்ந்து டி20 போட்டிகளை பதம் பார்த்து வருகின்றன.

எதற்கு இந்த அவசரம்? ஏன் மேற்கு இந்தியத் தீவுகளிலேயே முழுக்க நடத்தினால் என்ன? என்ற கேள்விக்கெல்லாம் ஐசிசி விடை பகிர்வது அவசியம். இப்போது இவர்களது இந்த பிட்ச் கோளாறுகளினால் பாகிஸ்தான் வெளியேறும் அபாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x